தனியார் பல்கலை சட்ட திருத்தம் மாநில வளர்ச்சிக்கு எதிரானது அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
தனியார் பல்கலை சட்ட திருத்தம் மாநில வளர்ச்சிக்கு எதிரானது அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
UPDATED : அக் 28, 2025 08:34 AM
ADDED : அக் 28, 2025 08:37 AM

மதுரை:
''இளைஞர்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்கு ஆபத்தான தனியார் பல்கலை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்,'' என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:
தமிழக அரசு தனியார் பல்கலை சட்ட திருத்தம் மூலம், உதவி பெறும் கல்லுாரிகளை அரசின் தலையீடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியாக அறிவித்துள்ளது. இது தமிழக வளர்ச்சியில் பின்னடைவை சந்திக்கும். இச்சட்டம் சமூகநீதி, இடஒதுக்கீடுக்கு எதிரானது.
பொருளாதாரத்தில் பிற மாநிலங்களைக்காட்டிலும் தமிழகம் 11.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு காரணம் இங்கு கல்வியில் பெரிய வாய்ப்பு இருப்பதால் தான். தமிழகத்தில் 82.9 சதவீதம் மாணவர்கள் மேல்படிப்புக்காக காத்திருக்கின்றனர்.
இவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் அரசு கல்லுாரிகள் மட்டுமின்றி, உதவிபெறும் கல்லுாரிகளும் உதவியாக உள்ளன. இவற்றில் இருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியால், தனியார் கல்லுாரிகளாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்படுவது ஏழை மாணவர்களே. மாநிலத்தின் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, உயர்கல்வி தடைபடும் அபாயம் உள்ளது. அரசுப்பள்ளிகள் இருப்பதாலேயே ஏழை மாணவர்கள் கல்வி வாய்ப்பு பெறுகின்றனர். பொருளாதார ரீதியாக சமூகம் உயரவதற்கு கல்வியே ஆதாரம்.
இதன் ஒரு கதவு மூடப்பட்டால் அனைத்தும் தடைபடும் என்பதை அரசு உணர வேண்டும்.
கடந்த காலங்களில் பல்வேறு ஆட்சியாளர்கள் பல மாற்றங்களை கொண்டு வந்தாலும், கல்வியில் எந்த சமரசமும் இன்றி அனைவருக்கும் கல்வியை உயர்கல்வி வரை கொண்டு சென்றனர். அந்தப்பணி தடைபடக் கூடாது என்பதற்காக அரசு உதவிபெறும் கல்லுாரிகள் பாதுகாக்கப்படுகின்றன.
அரசின் தலையீடால் குறைந்த கட்டணம் அல்லது கட்டணமின்றி கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கும் நிரந்தர பணி, நிலையான ஊதியம், பணிநியமன இடஒதுக்கீடு உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.
தற்போதைய சட்ட திருத்தத்தால் மீண்டும் சமூகநீதியற்ற, படிப்பறிவற்ற இளைஞர்களை உருவாக்கும் சூழலுக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. இதனால் கல்வியின் தரம் பாதிக்கப்படும். இளைஞர்கள், மாநில வளர்ச்சிக்கு ஆபத்தான இச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றனர்.

