இடிந்து விழும் நிலையில் கிராமப்புற நுாலகங்கள் கண்டுகொள்ளாத அரசு
இடிந்து விழும் நிலையில் கிராமப்புற நுாலகங்கள் கண்டுகொள்ளாத அரசு
UPDATED : மார் 27, 2024 12:00 AM
ADDED : மார் 27, 2024 10:54 AM
உடுமலை:
அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இவற்றை பொது நுாலகத்துறையில் இணைத்து, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், நுாற்றுக்கணக்கான கிராம மக்கள் பயன்பெறுவர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கடந்த, 2006ல், அனைத்து ஊராட்சிகளிலும் தலா, 3.25 லட்சம் ரூபாய் செலவில், நுாலகங்கள் கட்டப்பட்டன.ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் கண்காணிப்பில், இந்நுாலகங்கள் செயல்பட்டு வந்தன. இதில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், நுாலக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு, மாதம், 750 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது.அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், இந்நுாலகங்களுக்கு, புதிய புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யாதது; சம்பளம் வழங்குவதில் இழுபறி என தொடர் பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால், நுாலக பணிகளில், தொய்வு ஏற்பட்டது.தற்போது, இத்திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட பெரும்பாலான நுாலகங்கள், செயல்பாடு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. சில நுாலக கட்டடங்கள் பராமரிப்பின்றி, எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.பல கட்டடங்கள் முற்றிலுமாக சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி, சமூக விரோத செயல்கள் அரங்கேறும் பகுதியாக உள்ளது. கடந்த, 2006ல், தி.மு.க., ஆட்சிக்காலத்தில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டதால், தற்போதைய ஆட்சிக்காலத்தில், நுாலகங்கள் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிராம மக்கள் நாளிதழ் வாசிக்கவும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவியாகவும், விடுமுறை காலங்களில், பள்ளிக்குழந்தைகளுக்கு பயனுள்ள முறையில், இந்த நுாலகங்கள் இருந்தன.எனவே, நுாலகங்களை பொது நுாலகத்துறையில் இணைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்ட நுாலக ஆணைக்குழு நிதியில், கட்டடங்களை புதுப்பித்து, வாசகர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசுக்கும், மாவட்ட நுாலக ஆணைக்குழுவுக்கும் தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.இது குறித்து, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால், நுாற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த, பல ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.