கால்நடை பண்ணைகள் அமைக்க இளைஞர்களுக்கு அரசு அழைப்பு
கால்நடை பண்ணைகள் அமைக்க இளைஞர்களுக்கு அரசு அழைப்பு
UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 09:46 AM
சென்னை:
தொழில்முனைவோராக விரும்பும் படித்த இளைஞர்கள் கால்நடை பண்ணைகள் அமைக்க மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது.
அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட அறிக்கை:
உலக சந்தை பால் உற்பத்தியில், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக கொண்டு செல்ல, படித்த இளைஞர்கள், பெண்கள், தொழில் முனைவோர், பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு முன்வருவோருக்கு, பால்வளத்துறை உறுதுணையாக செயல்படும்.
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் மானியங்களை ஒருங்கிணைத்து, தாட்கோ வழியே ஆதிதிராவிடர்களுக்கு, திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் அல்லது 2.25 லட்சம் ரூபாய், இதில், எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.
பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில், 50 சதவீதம் அல்லது 3.75 லட்சம் ரூபாய் ஆகியவற்றில், எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். 'டாம்கோ' திட்டத்தின் கீழ், சிறுபான்மையினருக்கு, 6 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு, 6 சதவீதம் வட்டியில், வங்கிகள் வழியாக கடன் வழங்கப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கு, மாவட்ட தொழில் மையம் வழியாக, 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை, திட்ட மதிப்பீட்டில், மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
மேலும் காப்பீடு, மருத்துவ உதவிகள், பண்ணை அமைக்க தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் வழங்கப்படும். இவற்றின் வழியாக, குறைந்தது, 10,000 புதிய கால்நடை வளர்ப்போரை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.