சென்னை பல்கலை நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டம்; பேராசிரியர்கள் எதிர்ப்பு
சென்னை பல்கலை நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டம்; பேராசிரியர்கள் எதிர்ப்பு
UPDATED : அக் 30, 2025 07:31 PM
ADDED : அக் 30, 2025 08:05 PM

சென்னை:
சென்னை பல்கலைக்கு சொந்தமான பாலவாக்கம் நிலத்தை அரசு கையகப்படுத்தி, வணிக நோக்கத்துக்கு அரசு பயன்படுத்தும் திட்டத்திற்கு, பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை பல்கலையில் பணியாற்றிய பேராசிரியர் சதாசிவம், பாலவாக்கத்தில் உள்ள, 18 ஏக்கர் நிலத்தை பல்கலைக்கு தானமாக வழங்கியுள்ளார்.
இந்நிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை, தமிழக அரசு 33 ஆண்டுகள் குத்தகைக்கு கையகப்படுத்தி, பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும், போக்குவரத்து குழுமமான 'கும்டா'வுக்கு அலுவலகம் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு, பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:
சென்னை பல்கலை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. பல்கலையை பாதுகாக்க எந்தவித நிதியுதவியும் செய்யாத தமிழக அரசு, பல்கலையின் சொத்துகளை அபகரிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
பாலவாக்கம் நிலம், பல்கலை நலனுக்காக தானமாக தரப்பட்டது. இதில், பல்கலை பணியாளர்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், அபகரித்து வேறு திட்டத்தை செயல்படுத்த முயல்வதை ஏற்க முடியாது.
அதேபோல், புரசைவாக்கத்தில் முன்னாள் மாணவர் ஒருவர் வழங்கிய நிலத்தையும் கையகப்படுத்தி, விடுதி ஒன்று கட்டவும் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இது, பல்கலையை அழிக்கும் செயலுக்கு சமம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

