பயிற்சி கொடுத்து தண்ணி காட்டியது அரசு: அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணீர்
பயிற்சி கொடுத்து தண்ணி காட்டியது அரசு: அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணீர்
UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM
ADDED : ஜூன் 27, 2025 07:11 PM

சென்னை:
பொது சுகாதாரத் துறை சார்பில், 504 கிராம சுகாதார செவிலியர் பணிக்கு பயிற்சி பெற, அங்கன்வாடி ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்திருப்பது, ஏற்கனவே பயிற்சி முடித்து, பணிக்காக காத்திருக்கும் அங்கன்வாடி ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், மொத்தம் 54,449 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் ஊழியர்கள், அங்கன்வாடி பணி மட்டுமின்றி, சுகாதாரத் துறை பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், பொது சுகாதாரத் துறை சார்பில், ஆண்டுதோறும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் பணிக்கான, இரண்டு ஆண்டு ஏ.என்.எம்., டிப்ளமோ பயிற்சி அளிக்கப்பட்டு, துணை சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்பட்டது. கடந்த 2021 முதல், ஏ.என்.எம்., பயிற்சியை நிறைவு செய்தோர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என, அரசு அறிவித்தது.
மருத்துவ பணியாளர் தேர்வின்றி, அரசு வழங்கும் பயிற்சியை முடித்தவர்களை, கிராம சுகாதார செவிலியராக நியமிக்க வேண்டும் எனக்கோரி, பயிற்சி முடித்த 2,400 அங்கன்வாடி ஊழியர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பொது சுகாதாரத் துறை சார்பில், நடப்பாண்டு, 504 அங்கன்வாடி ஊழியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, கடந்த 3ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது; இது ஏற்கனவே பயிற்சி முடித்து, பணி கிடைக்காமல் உள்ள, அங்கன்வாடி ஊழியர்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அவர்களில் சிலர் கூறியதாவது:
பொது சுகாதாரத்துறை வழங்கும், இரண்டு ஆண்டு ஏ.என்.எம்., பயிற்சியை, 2021ல் நிறைவு செய்தோம். கடந்த நான்கு ஆண்டுகளாக, கிராம சுகாதார செவிலியர் பணி கேட்டு போராடி வருகிறோம். ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், அதிகாரிகளும், எங்களுக்கு வேலை வழங்காமல், ஆண்டுதோறும் தேவையின்றி, அங்கன்வாடி ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
நடப்பாண்டிலும், 504 பேருக்கு பயிற்சி அளிப்பது, வேதனை அளிக்கிறது. புதிதாக பயிற்சி அளிக்காமல், ஏற்கனவே பயிற்சியை நிறைவு செய்த, 2,400 பணியாளர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.