UPDATED : ஆக 30, 2024 12:00 AM
ADDED : ஆக 30, 2024 10:50 AM

பெ.நா.பாளையம்:
அரசு பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, அது குறித்த விபரங்களை அனுப்பி வைக்குமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது பருவமழை மற்றும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பல அரசு பள்ளி வளாகத்தில் வகுப்பறை கட்டடங்கள் பழுதடைந்து உள்ளன. அவற்றை செப்பனிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதில், அரசு பள்ளிகளின் கட்டடங்களை ஆய்வு செய்து, 100 சதவீதம் உறுதித் தன்மை உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பராமரிப்பு பணிகள் தேவைப்பட்டால், பொதுப்பணித்துறை அல்லது தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஒத்துழைப்புடன் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டடங்களை ஆய்வு செய்து, தற்காலிகமாக பராமரிப்பு பணிகள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விபரங்களை அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் அனுப்ப வேண்டும்.
அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளை பார்வையிட வருகை தரும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இன்ஜினியருக்கு தொடர்புடைய கல்வி அலுவலர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.