அரசு பள்ளி நுாற்றாண்டு விழா கோலாகலம்: மாணவர்கள் கலைநிகழ்ச்சி அசத்தல்
அரசு பள்ளி நுாற்றாண்டு விழா கோலாகலம்: மாணவர்கள் கலைநிகழ்ச்சி அசத்தல்
UPDATED : ஆக 10, 2026 03:34 PM
ADDED : ஆக 10, 2026 03:36 PM
மடத்துக்குளம்:
மடத்துக்குளம், சங்கராம நல்லுார் பேரூராட்சி, குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடந்தது.
மடத்துக்குளம் அருகேயுள்ள குப்பம்பாளையத்தில், 1926ம் ஆண்டு துவக்கப்பட்ட, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில், ஆத்துார், கொழுமம், குப்பம்பாளையம், புதுநகரம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள், இப்பள்ளியில் கல்வி பயின்று, பல்வேறு உயர் நிலைகளை அடைந்துள்ளனர்.
இப்பள்ளியின் நுாற்றாண்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது. பேரூராட்சித்தலைவர் மல்லிகா தலைமை வகித்தார். டாக்டர் பரமேஸ்வரன், முன்னாள் ஆசிரியர்கள் தனபாக்கியம், நாகரத்தினம், ஆடிட்டர் கணேசன் முன்னிலை வகித்தனர்
தலைமை ஆசிரியர் பொன்னுத்தாய் வரவேற்றார். பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள், பள்ளியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு, மாணவர்களிடையே கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் பரமேஸ்வரன் பேசியதாவது:
குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நுாற்றாண்டுகளை, கடந்து பல நுாறு மாணவர்களை உருவாக்கி, சமுதாயத்தில் பல்வேறு சிறந்த இடங்களில் பணியாற்றிட உறுதுணையாக இருந்துள்ளது.
அரசுப்பள்ளி என்பதை விட, மிகச் சிறந்த கல்விக்கூடமாக, ஒழுக்கத்திலும், படிப்பிலும் சிறந்து விளங்கி வருகிறது.
மாணவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடித்து, தீய எண்ணங்களை தவிர்த்து, நவீன தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல், கட்டுப்பாடுடன் படித்து பள்ளிக்கும் உருவாக்கிய பெற்றோர் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா குழு நிர்வாகிகள், கருப்புசாமி, தாமோதரன், முருகவேல், கற்பகம், பிரேமலதா, லதா, நந்தினி, முத்துசாமி, வடுகநாதன், ராஜேந்திரன், செல்வராஜ், சரவணன், கணேசன் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
