UPDATED : ஜூலை 08, 2026 06:17 PM
ADDED : ஜூலை 08, 2026 06:19 PM
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 326 மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவனின் தலைமை பண்பு, ஜனநாயகம், கடமையை உணர்வதற்கு பள்ளிக் கல்வி துறையின் மகிழ் முற்றம் திட்டத்தில், மாணவர் தேர்தல், தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமையில் நடந்தது.
உதவி தலைமை ஆசிரியர் ரகு ஆணையராக செயல்பட்டார். தேர்தல் நடைமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அமைச்சரவை பதவிகளுக்கு நேற்று முன்தினம், 12 மாணவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாணவர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேர்தல் நாளான நேற்று, பள்ளி வளாகம் ஓட்டுச்சாவடி போல் மாறி இருந்தது. இதில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களும் ஓட்டு போட்டனர். ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், 5 மாணவர்கள் வெற்றி பெற்றனர். அவர்கள், கல்வி அமைச்சகம், மாணவர் நலன் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் தொடர்பு, சுகாதாரம் போன்ற பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய மாணவ அமைச்சர்கள் அனைவருக்கும், 10ல் பதவிப்பிரமாணம் நடக்கிறது. வெற்றி பெற்ற மாணவ அமைச்சர்களுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதில், பட்டதாரி ஆசிரியர்கள் பார்த்திபன், ராஜாமணி, உடற்கல்வி ஆசிரியர் ஜகஜீவன் ராம் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
