UPDATED : ஏப் 27, 2024 12:00 AM
ADDED : ஏப் 27, 2024 10:22 AM
திருப்புவனம்:
திருப்புவனம் அருகே வடகரை அரசு பள்ளி கூரை காற்றில் பறந்து மின்கம்பியில் விழுந்து விபத்து ஏற்பட்டது.
வடகரை அரசு தொடக்கப் பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளி கட்டடம் சேதமடைந்ததால் கடந்த இரு மாதங்களுக்கு முன் புதிய கட்டடம் 33 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார். நேற்று மாலை திருப்புவனம் பகுதியில் லேசான காற்று வீசியது.
இதில் பள்ளி கட்டடத்தின் மேற்பகுதியில் மழை நீரை தடுக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தகரசீட் பறந்து அருகில் சென்ற மின் கம்பியில் விழுந்தது. இரும்புக் கம்பியுடன் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அருகில் இருந்த மக்கள் மின் கம்பியில் விழுந்த தகர சீட்டை அகற்றினர். பின் நீண்ட நேரம் கழித்து மின்சாரம் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், புத்தம் புதிய கட்டடத்தில் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் ஷீட் லேசான காற்றுக்கே பறந்து விட்டது. பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் வெளியேறிய பின் விபத்து நிகழ்ந்தது. மின்கம்பியில் விழுந்த நேரம் கம்பி அறுந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். 33 லட்ச ரூபாய்க்கு தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடந்துள்ளன என்றனர்.
தகர சீட்களை சுவற்றில் ஆணி அடித்து பொருத்தாமல் வெறுமனே சிமென்ட் வைத்து பூசியுள்ளனர். திருப்புவனம் ஒன்றியத்தில் கானுார், பத்துபட்டி உள்ளிட்ட 9 கிராமங்களில் இது போன்ற புதிய கட்டடம் கட்டப் பட்டது. எனவே அனைத்து கட்டடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.