ஆங்கிலத்தில் மாநில பேச்சுப்போட்டி அரசு பள்ளி மாணவி தேர்வு
ஆங்கிலத்தில் மாநில பேச்சுப்போட்டி அரசு பள்ளி மாணவி தேர்வு
UPDATED : அக் 25, 2026 01:45 PM
ADDED : அக் 25, 2026 01:47 PM
ஆத்துார்:
கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, கடந்த வாரம், சேலத்தில், மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டி நடந்தது.
அதில் தம்மம்பட்டி, செக்குமேடு அரசு தொடக்கப்பள்ளி, 5ம் வகுப்பு மாணவி கவிநிலா, ஆங்கில பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, மாநில போட்டிக்கு தேர்வானார்.
அதே மாணவி, திருக்குறள் ஒப்புவித்தலில், மாவட்ட அளவில், 2ம் இடம், நாட்டுப்புற பாடல் தனி நபர் பிரிவில், மாவட்ட அளவில், 3ம் இடம் பிடித்து அசத்தினார்.அதே பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கும் அவரது சகோதரி மதிநிலா, ஆங்கிலத்தில் கதை கூறும் போட்டியில், மாவட்ட அளவில், 3ம் இடம் பெற்றார்.
இதனால் சகோதரிகளுக்கு, நேற்று முன்தினம் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை சாதனா தலைமை வகித்தார். கெங்கவல்லி வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர், ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
