குப்பையில் இருந்து கலைப் பொருட்கள் தயாரித்து அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
குப்பையில் இருந்து கலைப் பொருட்கள் தயாரித்து அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
UPDATED : ஜன 15, 2026 10:34 AM
ADDED : ஜன 15, 2026 10:35 AM
அன்னூர்:
குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட கலைப் பொருட்கள் கண்காட்சி கொம்பநாயக்கன்பாளையத்தில் நடந்தது.
ஊரக வளர்ச்சி துறை சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில், மாணவர்களிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குப்பையில் இருந்து பயனுள்ள பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி தரவும் கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாஹி உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி, அன்னூர் ஒன்றியத்தில், 12 ஊராட்சிகளை சேர்ந்த துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கண்காட்சி நடந்தது, இதில் மாணவ, மாணவியர், பயன்படுத்தப்பட்ட பேப்பர் கப், பிளாஸ்டிக் கப், பாட்டில்கள், தேங்காய் தொட்டி, அட்டை, பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்தி, வீடு, மின்விசிறி, சமையல் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், கலைப் பொருட்கள் தயாரித்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் அப்துல் வஹாப் கண்காட்சியை பார்வையிட்டு பேசுகையில், கோவை மாவட்டத்தில் 400 புள்ளிகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் பொருட்கள் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கண்காட்சியில் சிறப்பான பொருட்கள் தயாரித்த பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, மகேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், ஊராட்சி செயலர்கள், உள்பட பலர் பங்கேற்றனர்.

