குளிரில் கிழிந்த ஸ்வெட்டர், ஷூக்கள் அரசு பள்ளி மாணவர்கள் பரிதாபம்
குளிரில் கிழிந்த ஸ்வெட்டர், ஷூக்கள் அரசு பள்ளி மாணவர்கள் பரிதாபம்
UPDATED : நவ 08, 2025 10:46 AM
ADDED : நவ 08, 2025 10:47 AM

குன்னுார்:
நீலகிரி அரசு பள்ளிகளில், கடுங்குளிரில் மாணவர்கள் கிழிந்த ஸ்வெட்டர், ஷூக்களை பயன்படுத்தும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில், இலவச பாட புத்தகங்கள், நோட்டு, சீருடைகள், ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. எனினும், பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு, உள் கட்டமைப்பில் குறைபாடுகள் என, பல பிரச்னைகள் நீடிக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் பள்ளிகள் மூடப்பட்டு, ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஸ்வெட்டர் மற்றும் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் ஷூக்கள் வழங்கப்படுகின்றன. இந்த கல்வியாண்டின், ஐந்து மாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், பெரும்பாலான மாணவர்கள் ஷூக்கள், ஸ்வெட்டர்களை கிழிந்த நிலையில் பயன்படுத்துகின்றனர். மழை, குளிரில் மாணவ, மாணவியர் நனைந்து சிரமப்படுகின்றனர்.
பெரும்பாலான பள்ளிகளில் பயன்படுத்தும் ஷூக்கள் மற்றும் ஸ்வெட்டர்கள் தரமில்லாத நிலையில் உள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். சில பள்ளிகளில் மாணவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு கூறுகையில், ''தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ளேன். மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட ஷூக்கள், ஸ்வெட்டர்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். தலைமையாசிரியர்கள் கூட்டம் கூட்டி குறைகளுக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.

