தமிழ்மொழியை கற்றுக்கொள்ளுங்கள் வெளிமாநிலத்தவர்களுக்கு கவர்னர் அறிவுரை
தமிழ்மொழியை கற்றுக்கொள்ளுங்கள் வெளிமாநிலத்தவர்களுக்கு கவர்னர் அறிவுரை
UPDATED : பிப் 21, 2025 12:00 AM
ADDED : பிப் 21, 2025 12:57 PM
சென்னை:
அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என கவர்னர் ரவி அறிவுரை வழங்கினார்.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா, கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்தது.
விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
மாநிலங்கள் உருவான தின கொண்டாட்டம், நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள், கல்லுாரி பொது இடங்களிலும், நடக்க வேண்டும். இந்தியா ஒரு பரந்த நாடு. நிறைய பன்முகத்தன்மை கொண்டது.
நம் நாட்டின் பன்முகத் தன்மைக்கு, எந்த நாடும் நிகராக முடியாது. அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ் தெரிந்தால், உங்களுக்கு தமிழகம் குறித்த பல தகவல்கள் தெரியவரும். எனக்கு தமிழில் பேசினால் புரிந்து கொள்ள முடியும். செய்தித் தாள்களை படிக்க முடிகிறது. கேரளாவில் பணி செய்யும்போது, மலையாளம் கற்றுக்கொண்டேன்.
தமிழ் நண்பர்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களை, விடுமுறை நாட்களில், உங்கள் பகுதிக்கு அழைத்து சென்று, பந்தத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். எனக்கு பல மாநிலங்களில் நட்பு வட்டாரம் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில், ரயில் சேவைகள், விமான நிலையங்கள், இன்று ஏராளமாக வளர்ந்து விட்டன. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு, மாநிலங்களின் பந்தம் முக்கியமானதாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவின் எதிர்காலம் என்ற அளவுக்கு மனிதவளம், இயற்கை வளங்கள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

