சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான அதிகாரிகள் கவர்னரால் நியமனம்
சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான அதிகாரிகள் கவர்னரால் நியமனம்
UPDATED : ஜூன் 02, 2026 04:34 PM
ADDED : ஜூன் 02, 2026 04:35 PM
புதுச்சேரி:
சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கல்வியாண்டு சென்டாக் மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளராக உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இயக்குநர் முத்து மீனா, கன்வீனராக புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஜெயராஜ், துணை கன்வீனராக வில்லியனுார் கஸ்தூரிபா காந்தி மகளிர் கல்லுாரி முதல்வர் செரில் ஆன் ஜெரார்டின் சிவன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சென்டாக் குழு பல்வேறு படிப்புகளுக்கான, முழுநேர, பகுதிநேர முதுகலை, இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகள், தகுதி வரம்புகள் மற்றும் சேர்க்கை வழிமுறைகள் அடங்கிய தகவல் கையேட்டை இக்குழு வெளியிடும்.
புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அரசு கல்லுாரி இடங்கள் மட்டுமின்றி, மத்திய அரசால் புதுச்சேரி மாணவர்களுக்காக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசு கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கும் இக்குழுவே கலந்தாய்வு நடத்தும்.
தேவைப்படும் பட்சத்தில், கல்லுாரிகளின் முதல்வர்கள் அல்லது துறை சார்ந்த வல்லுநர்களை சென்டாக் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க இக்குழுவின் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
இக்குழுவின் பதவிக் காலம் ஒரு வருடம் அல்லது 2026 - 27ம் கல்வியாண்டின் சேர்க்கை செயல்முறைகள் முழுமையாக முடிவடையும் வரை நடைமுறையில் இருக்கும்.
இருப்பினும், புதிய குழு ஒன்று அமைக்கப்படும் வரை இந்த குழுவே தொடர்ந்து செயல்படும். இதற்கான அரசாணை கவர்னர் கைலாஷ்நாதன் ஆணைப்படி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி சார்பு செயலர் மாலதி வெளியிட்டுள்ளார்.
