சிதம்பரம் நந்தனார் பள்ளியில் மாணவர்களுடன் உணவருந்திய கவர்னர்
சிதம்பரம் நந்தனார் பள்ளியில் மாணவர்களுடன் உணவருந்திய கவர்னர்
UPDATED : ஜன 28, 2025 12:00 AM
ADDED : ஜன 28, 2025 11:57 AM
சிதம்பரம்:
சிதம்பரம் நந்தனார் பள்ளியில், மாணவர்களுடன் கலந்துரையாடிய கவர்னர் ரவி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் நேற்று நடந்த சுவாமி சகஜானந்தா பிறந்த நாள் விழாவில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார். பின்னர் அவர், சகஜானந்தாவால் துவங்கப்பட்ட, நந்தனார் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு சென்றார்.
பள்ளி விடுதியை பார்வையிட்ட கவர்னர், அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடி, நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அப்போது, பள்ளி ஆசிரியர்களிடம், 'இங்கு படித்த மாணவர்கள் உயர் பதவிகள் வகித்துள்ளனரா என கேட்டார்.
இங்கு படிக்கும் மாணவர்கள் டாக்டர்கள் மற்றும் பொறியாளர்களாக உருவாகும் வகையில் கற்பிக்க வேண்டும், உயர் பதவியில் உள்ள முன்னாள் மாணவர்களை அழைத்து வந்து மாணவர்களிடையே உரையாற்ற சொல்லுங்கள் என்றார்.
தொடர்ந்து விடுதியின் பார்வையாளர் பதிவேட்டில், கவர்னர் தனது கருத்தை பதிவு செய்து கையெழுத்திட்டார்.
அதில், பள்ளிக்கு வருவதில் மகிழ்ச்சி. சுவாமி சகஜானந்தாவால், நுாறு ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்ட பள்ளி. கீழ்தட்டு மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.
பெரும் தலைவர்கள் பயின்ற தலைசிறந்த பள்ளியாகும். வரலாற்றில் நெருக்கடியான நேரத்தில், இப்பள்ளி துவங்கப்பட்டுள்ளது. காந்தி, ராஜகோபாலாச்சாரி போன்ற பெரும் தலைவர்கள் ஆசி பெற்ற பள்ளி. பள்ளி மென்மேலும் வளர்ச்சி அடைந்து, மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன் என பதிவிட்டார்.
அதனையடுத்து, மதியம் பள்ளியில் சமைத்த, சைவ உணவை, மாணவர்களுடன் அமர்ந்து ருசித்து சாப்பிட்டார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமையல் செய்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், சென்னை புறப்பட்டு சென்றார்.
கவர்னர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிதம்பரம் மேலவீதி அண்ணா சிலை அருகே கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூ., காங்., உள்ளிட்ட கட்சியினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, மாலை விடுவித்தனர்.