தேடுதல் குழு நியமனத்தில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்: யுஜிசி விதிமுறைகள் வெளியீடு
தேடுதல் குழு நியமனத்தில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்: யுஜிசி விதிமுறைகள் வெளியீடு
UPDATED : ஜன 07, 2025 12:00 AM
ADDED : ஜன 07, 2025 04:42 PM

புதுடில்லி:
பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழு அமைப்பதில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், யு.ஜி.சி., விதிமுறைகளை திருத்தி உள்ளது.
பல்கலைகழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழகத்தில் வேந்தரான கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை கவர்னர் நியமித்தார். ஆனால், தமிழக உயர்கல்வித்துறை பிறப்பித்த அரசாணையில், அந்த உறுப்பினர் நீக்கப்பட்டு இருந்தார். இதற்கு கவர்னர் எதிர்ப்பு தெரிவித்தார். கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்பிரச்னை உள்ளது.
இந்நிலையில், துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழு அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை யு.ஜி.சி., தயாரித்து உள்ளது.
யுஜிசி( பல்கலை, கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்வி சார்ந்த அதிகாரிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதி உயர்கல்வித் தரம் குறித்த நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2025 என்ற தலைப்பில் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டு உள்ளார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
*மூன்று நிபுணர்கள் கொண்ட தேடுதல் குழுவை பல்கலை வேந்தர் நியமிக்க வேண்டும்.( தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி தேடுதல் குழுவில் 3-5 பேர் இருப்பார்கள். அவர்கள் குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்ற வரையறை கிடையாது).
*துணைவேந்தர் நியமனத்திற்கு என அகில இந்திய அளவில் நாளிதழ்களில் விளம்பரம் மற்றும் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்.
*தேடுதல் குழுவில், வேந்தர் நியமிக்கும் பிரதிநிதி தலைவராக இருப்பார். யுஜிசி தலைவரின் பிரதிநிதி, பல்கலை சார்பில் நியமிக்கப்படும் பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுவார்கள். ( பல மாநிலங்களில் கவர்னரின் பிரதிநிதியை மாநில அரசுகள் பரிந்துரை செய்யும். பல மாநிலங்களில் இந்த நடைமுறையை மாற்றி கவர்னரே நியமித்தார்)
*இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி.,யின் திட்டங்களில் பங்கேற்க முடியாது. பட்டங்களை வழங்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து பொது மக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

