'ஆப்பரேஷன் சிந்துார்' போன்ற நடவடிக்கையை முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியாது மாணவர் அமைப்பு மாநாட்டில் கவர்னர் ரவி பேச்சு
'ஆப்பரேஷன் சிந்துார்' போன்ற நடவடிக்கையை முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியாது மாணவர் அமைப்பு மாநாட்டில் கவர்னர் ரவி பேச்சு
UPDATED : செப் 21, 2025 12:00 AM
ADDED : செப் 21, 2025 08:13 AM

சென்னை:
''ஆப்பரேஷன் சிந்துார் போன்ற நடவடிக்கைகளை, இதற்கு முன்பு இருந்த தலைவர்களால் செய்திருக்க முடியாது,'' என, கவர்னர் ரவி பேசினார்.
சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனம் மற்றும் 'திங்க் இந்தியா' மாணவர் அமைப்பின் சார்பில், சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில், 'தக் ஷிண் பதா மாநாடு' இரண்டு நாட்கள் நடக்கிறது.
'தேச மறுமலர்ச்சிக்கான தொழில்முனைவு மற்றும் செயற்கை நுண்ணறிவு' என்ற தலைப்பில், இளம் சிந்தனையாளர்கள், தொழில் முனைவோர்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள், இம்மாநாட்டில் விவாதிக்கின்றனர்.
மாநாட்டை துவக்கி வைத்து, கவர்னர் ரவி பேசியதாவது:
நம் இளம் தலைமுறையின் வலிமை, எதிர்கால நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
சுதந்திரத்திற்கு பின், நம் பாடத்திட்டங்களில், பாரதத்தின் உண்மையான சிந்தனைகள் புறக்கணிக்கப்பட்டன. காலனித்துவ சிந்தனையால் கல்வி பாதிக்கப்பட்டது. நம் பாரதம், 5,000 ஆண்டுகள் பழமையானது.
கலாசாரம் இது, ஒரே அரசால் ஆளப்பட்ட நாடாக இல்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குடும்பம், கலாசாரம், வேத சிந்தனை, தர்மம் என்ற அடிப்படையில் உருவானது. மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள், நம் நாட்டில் இருந்த கோவில்களை அழித்து, நம் அடையாளத்தை அழிக்க முயன்றனர்; நம் மக்களை துன்புறுத்தினர்.
ஆனால், அதில் அவர்கள் தோல்வியடைந்தனர். 19ம் நுாற்றாண்டில், 'ஜேம்ஸ் மில்' என்ற மிஷினரியை சேர்ந்தவர், இந்தியாவுக்கு ஒருமுறை கூட வராமல், இந்தியாவின் வரலாறு குறித்து ஐந்து புத்தகங்களை எழுதி உள்ளார்.
அதில், 'இந்தியாவில் நல்ல விஷயங்கள் எதுவும் கிடையாது. ஹிந்துக்கள் அடிமையாக இருக்க கூடியவர்கள். இந்திய இலக்கியங்கள் நம் நுாலகத்திற்கு மதிப்பற்றவை' என, எழுதி உலகம் முழுதும் பரப்பினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பகுதியில், பாரதத்தை மொழி, ஜாதி, இனம், மதம் என பிரித்தனர். நம் பாரதம் என்பது ஒரு ராஷ்டிரம். இது, அனைவரும் ஒரே குடும்பம் என்று வலியுறுத்துகிறது.
வறுமை கடந்த 2014ம் ஆண்டு தேசத்தை நேசிக்கும் தலைமை உருவான பின், நாட்டில் வன்முறை குறைந்தது. 2014ம் ஆண்டுக்கு முன், நாம் அறிவில் வறுமையுடன் இருந்தோம்; மற்றவர்களை நகல் எடுப்பவர்களாக இருந்தோம். பிறர் உருவாக்குவதை பயன்படுத்துபவராக இருந்தோம்.
சுய அறிவை உருவாக்காமல், வெறும் பட்டங்கள் மட்டும் உருவாக்கினோம். நம் ராணுவம், வெளிநாட்டு ஆதாரங்களையே சார்ந்திருந்தது. இதற்காக ஒப்பந்தங்கள் செய்ய, முந்தைய தலைவர்கள் துணிவு காட்டவில்லை.
'ஆப்பரேஷன் சிந்துார்' போன்ற நடவடிக்கைகளை, இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா; சாத்தியம் கிடையாது. பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு, அப்போதிருந்தவர்கள் தயங்கினர்.
மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவரை, அப்போதைய பிரதமர் அழைத்து பேசியதை, நாடே கண்டது. ஆனால், தற்போதைய தலைமை தைரியமாக முடிவெடுத்து, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இவ்வாறு அவர் பேசினார்.
'உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறைவது நல்லது அல்ல'
சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் பேசுகையில், ''நம் நாட்டில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 28 சதவீதமாக உள்ளது. இதை, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. ''நாட்டில் உயர் கல்வி சேர்க்கையில், 72 சதவீதம் குறைவு என்பது நல்லதல்ல. எனவே, மாணவர்கள் ஒவ்வொரு கிராமங்களையும் தத்தெடுத்து, உயர் கல்வி செல்லாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். 'திங்க் இந்தியா' அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அகன்ஷா வரதே, ஏ.பி.வி.பி., எனும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய ஒருங்கிணைப்பு செயலர் ஆஷிஷ் சவுகான் பங்கேற்றனர்.