UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 03:53 PM
பெங்களூரு:
கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தில், வேலை வாங்கி தருவதாக கூறி, பெண்ணிடம் 4.10 கோடி ரூபாய் மோசடி செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரை சேர்ந்தவர் நீலம்மா, 54. இவர் கடந்த மாதம் 26ம் தேதி விதான் சவுதா போலீசில் அளித்த புகாரில், கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தில், வேலை வாங்கி தருவதாக கூறி, ஒரு கும்பல் தன்னிடம் 4.10 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாகவும், கவர்னர், முதல்வரின் போலி கையெழுத்தை போட்டு, பணி நியமன ஆணை வழங்கியது என்றும் கூறி இருந்தார்.
வழக்குப்பதிவு செய்த விதான் சவுதா போலீசார், வழக்கை சி.சி.பி., விசாரணைக்கு மாற்றினர். இந்நிலையில் நீலம்மாவிடம் மோசடி செய்ததாக, பெங்களூரின் ரியாஸ் அகமது, 41, யூசுப், 47, சந்திரப்பா, 44, ருத்ரேஷ், 35 ஆகியோர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அரசு வேலைக்கு செல்லும் ஆசையில் இருப்பவர்களை குறிவைத்து, வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சங்கர், மகேஷ், ஹர்ஷவர்தன் ஆகிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.