அமைச்சர் ஆய்வுக்கு அரசு பள்ளிகள் தயார்; ஒவ்வொரு பகுதியிலும் பட்டியல் சேகரிப்பு
அமைச்சர் ஆய்வுக்கு அரசு பள்ளிகள் தயார்; ஒவ்வொரு பகுதியிலும் பட்டியல் சேகரிப்பு
UPDATED : ஜன 02, 2025 12:00 AM
ADDED : ஜன 02, 2025 12:32 PM
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில், அமைச்சர் ஆய்வுக்கு வர விருப்பமுள்ள தயாராக இருக்கும் அரசு பள்ளிகள் குறித்து, பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மாநில அளவில் துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள அரசு பள்ளிகளில், சுற்றுச்சூழல், கல்வித்தரம், மாணவர் எண்ணிக்கை, மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதுபோல் ஆய்வுக்கு வருவதற்கு, அனைத்திலும் தயாராக இருக்கும் அரசு பள்ளிகள் விருப்பம் தெரிவிக்கவும், அந்த பள்ளிகளில் பார்வையிடுவதற்கும் அமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வு விருப்பமுள்ள பள்ளிகள் குறித்து பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.
கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், ஒரு வட்டாரத்தில் குறைந்தபட்சமாக, 15 அரசு பள்ளிகள் பட்டியல் அனுப்ப கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி விருப்பமுள்ள பள்ளிகளின் பட்டியல், பள்ளிக்கல்வி இணையதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. அந்த பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்., மாதம் அமைச்சர் ஆய்வு வரலாம் என தற்காலிகமாக கல்வித்துறை தெரிவித்துள்ளது என்றனர்.