அரசுப்பள்ளி மாணவர்கள் அபாரம்: நீட் தேர்வில் மாநில சாதனை
அரசுப்பள்ளி மாணவர்கள் அபாரம்: நீட் தேர்வில் மாநில சாதனை
UPDATED : ஜூன் 08, 2024 12:00 AM
ADDED : ஜூன் 08, 2024 11:02 AM

திருப்பூர்:
நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சஞ்சய் மாநில முதலிடம் பெற்றார்; இதேபோல் மறுதேர்வு எழுதியோர் பிரிவில் மாணவி பவானி சாதித்துள்ளார். ஆண்டுக்காண்டு தேர்வெழுதுவோர் மற்றும் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நடந்த நீட் தேர்வை, நாடு முழுக்க, 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். திருப்பூர் மாவட்ட அளவில், கே.எம்.சி., பப்ளிக் பள்ளி, ஏ.வி.பி., கல்லுாரி, லிட்டில் கிங்டம் பள்ளி மற்றும் வித்யாசாகர் பப்ளிக் பள்ளி என, 4 தேர்வு மையங்களில், 2,200 மாணவ, மாணவியர் நீட் தேர்வெழுதினர். நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின.
* அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில், ஊதியூர் சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய், 687 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
* மறுதேர்வு எழுதியோர் பிரிவில், கணபதிபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவானி, 650 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
* திருப்பூர் மாவட்ட அளவில், அரசுப்பள்ளிகளில் இருந்து தேர்வெழுதிய மாணவ, மாணவியரை பொறுத்தவரை, திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரூபாஸ்ரீ, 441 மதிப்பெண் பெற்றார்.
கடந்தாண்டுகளைக் காட்டிலும் நீட் தேர்வெழுதிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியரின் மதிப்பெண்களும் உயர்ந்து வருகின்றன. இதேபோல் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பலரும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
பயன் தந்த பயிற்சி வகுப்புகள்
திருப்பூர் மாவட்ட அளவில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில், 464 பேர் நீட் தேர்வெழுதினர்; இவர்களில், 236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு, 358 பேர் தேர்வெழுதினர்; அவர்களில், 198 பேர் தேர்ச்சி பெற்றனர்; இதில், 41 பேருக்கு மருத்துவக் கல்லுாரியில் சீட் கிடைத்தது. கடந்த, 5 ஆண்டுகளாகவே, திருப்பூர் மாவட்ட அளவில் நீட் தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், தேர்வில் வெற்றி பெறச் செய்யும் வகையிலும், இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
இந்தாண்டு, திருப்பூரில், இரு இடங்கள்; தாராபுரம், உடுமலை மற்றும் பல்லடத்தில், தலா ஒரு இடம் என, நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது; இது, மாணவர்களுக்கு பயனளிப்பதாக இருந்தது.கடந்த கல்வியாண்டில், 12ம் வகுப்பு பொது தேர்வில், மாநில அளவில், முதலிடம்; 11ம் வகுப்பு பொது தேர்வில், 3ம் இடம் பிடித்தது; கல்வியில் முன்னேற்றம் தென்படும் அதே அளவுக்கு போட்டி தேர்வு எழுதுவதிலும், அதில் தேர்ச்சி பெறுவதிலும் மாணவ, மாணவியர் மத்தியில் முன்னேற்றம் தென்படுகிறது என்றார் சுரேஷ்குமார், மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர்.