சூழலை பாதுகாக்க பசுமை சைக்கிளத்தான்!கோவையில் தினமலர் சார்பில் நடக்கிறது
சூழலை பாதுகாக்க பசுமை சைக்கிளத்தான்!கோவையில் தினமலர் சார்பில் நடக்கிறது
UPDATED : ஜூன் 06, 2024 12:00 AM
ADDED : ஜூன் 06, 2024 10:00 AM

கோவை:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவையில் தினமலர் சார்பில் பசுமை சைக்கிளத்தான், வரும் ஞாயிறன்று நடக்கவுள்ளது.
எல்லாமே காசு, எல்லாவற்றிலும் மாசு; மண் மலடாகிவிட்டது. ஆற்றுத் தண்ணீரை அள்ளிக் குடிக்க முடியாதபடி, அதுவும் விஷமாகிவிட்டது. காற்றை மட்டும் தான் இன்னும் காசு கொடுத்து வாங்காமல் இருக்கிறோம்; அதற்கும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அதற்குள் நாம் விழித்துக் கொண்டு, காற்று மாசை நீக்கி, நேற்று இருந்த சூழலை நாளைய சந்ததிக்கு விட்டுச் செல்ல வேண்டும். கால் கோடியை தாண்டிவிட்ட வாகனங்கள் வெளியிடும் புகை, காற்றைக் கருப்பாக்கி, மூச்சில் நஞ்சைக் கலந்து கொண்டிருக்கின்றன.
நல்ல காற்றுக்காக நாம் மரம் வளர்ப்பது ஒரு புறம்; அத்துடன், சூழலுக்கு பகையாகும், வாகனப் புகையைக் குறைப்பதும், நம் கையில் தான் இருக்கிறது. வனம், வன உயிரினம், சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் மீட்பு ஆகியவற்றில், தினமலர்'நாளிதழின் பங்களிப்பு அளவிடற்கரியது.
இடைவிடாத இந்த தேசப்பணியில், இந்த பயணம், இன்னுமோர் இனிய தடமாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை, கோவையில் 'பசுமை சைக்கிளத்தான் என்ற நிகழ்வு நடக்கவுள்ளது.
சைக்கிள் பயணம் நலம்
கூடுமானவரை, நம் பயணங்களில், காற்று மாசு ஏற்படுத்தும் புகை வாகனங்களைத் தவிர்த்து, சைக்கிளில் பயணம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, இந்த பசுமை சைக்கிளத்தான் நிகழ்வு. மாசில்லா பயணத்தை வலியுறுத்தும் இந்த நிகழ்வை, 'தினமலர்' நாளிதழ் உடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் நேரு கல்வி குழுமம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
கோவை மாநகர காவல் துறையின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும், இந்த பசுமை சைக்கிளத்தான், வரும் 6 ஞாயிறு காலை 7:15 மணிக்கு, வாலாங்குளத்தில் துவங்கி, 9:15 மணிக்கு ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் முடிவடையும்.
டி சர்ட், சான்றிதழ் உண்டு
சூழல் காக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்வை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார். இந்த பசுமை சைக்கிளத்தான் நிகழ்வில், 15 வயதுக்கு மேற்பட்ட யாரும், சைக்கிள் உடன் வந்து பங்கேற்கலாம்.
இதில் முறைப்படி பதிவு செய்து பங்கேற்போருக்கு, இலவசமாக டி சர்ட் மற்றும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர், 95666 57024 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில், பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்ணை அனுப்பி, பதிவு செய்து கொள்ளலாம்.
மாணவர்கள், சைக்கிள் கிளப் உறுப்பினர்கள், சூழல் ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இதில் பங்கேற்க, தினமலர் நாளிதழ் அன்புடன் அழைக்கிறது.
இது நம் நகரம்...இதை துாய்மையுடைய, பசுமையான நகரமாக்க இணையட்டும் நம் கரம்!