UPDATED : மே 30, 2025 12:00 AM
ADDED : மே 30, 2025 09:41 AM

திருப்பூர்:
துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு, வரும் ஜூன் 15ல் நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் உடுமலை, குண்டடத்திலுள்ள கூடுதல் பயிற்சி மையங்களில், மாணவ, மாணவியர் 150 பேர் சேர்ந்து, குரூப் - 1 தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
பயிற்சி மையங்களில் படிக்கும் இம்மாணவர்களுக்கு அவ்வப்போது மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, அவர்களின் திறன் பரிசோதிக்கப்பட்டுவருகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் பயிற்சி மையத்தில், 85 மாணவ, மாணவியர் குரூப் - 1 தேர்வுக்கு படித்து வருகின்றனர். இவர்களுக்கான மாதிரி தேர்வு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் துவக்கிவைத்தார்.
மாணவ, மாணவியர் மொத்தம் 65 பேர் பங்கேற்று, மாதிரி தேர்வு எழுதினர். மொத்தம் 200 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் கொடுக்கப்பட்டது. காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் மாதிரி தேர்வு எழுதினர்.
பயிற்சி மைய அலுவலர்களால், மாதிரித்தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண் தெரிவிக்கப்படும். இதன் வாயிலாக, மாணவர்கள், தவறுகளை சரி செய்துகொண்டு, குரூப் - 1 தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வர்.