குரூப் 4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பு
குரூப் 4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பு
UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 10:15 AM

மதுரை:
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என வேலைதேடும் இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 4 தேர்வில் ஆண்டுதோறும் பல லட்சம் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். அத்தேர்வு மூலம் பிளஸ்2 முடித்த பின் சி மற்றும் டி பிரிவில் எழுத்தர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்வர்.
அரசு துறைகளில் இந்த பிரிவு பணியிடங்கள் லட்சக்கணக்கில் காலியாக உள்ளன. எனவே ஆண்டுதோறும் இத்தேர்வில் பத்தாயிரம் பணியிடங்களையாவது நிரப்பும் வகையில் அரசு இத்தேர்வை நடத்துகிறது.
இதில் அதிகளவு கிராமப்புற மாணவர்கள் பங்கேற்று அரசு துறை பணியிடங்களில் நுழைந்து விடுகின்றனர்.
அதன்படி 2018 ல் 11 ஆயிரத்து 949 பணியிடங்களுக்கும், 2019 ல் 9 ஆயிரத்து 684 பணியிடங்களுக்கும், 2022 ல் 10 ஆயிரத்து 139 பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. 2020, 2021 ல் கொரோனா காரணமாகவும், 2023லும் இத்தேர்வு நடத்தப்படவில்லை. 2024ல் 8 ஆயிரத்து 932 பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு அறிவித்துள்ள பணியிடங்களில் வனத்துறைக்குரிய பணியிடங்களுக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளன. வனத்துறைக்கு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் தனியாக நடத்தப்படும் பணியிடங்களை இங்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் சேர்த்துள்ளனர்.
இதனால் அமைச்சுப் பணியாளர்களுக்கென நடத்தப்படும் தேர்வில் பங்கேற்கும் இளைஞர்கள் தங்கள் வாய்ப்பு பறிபோவதாக வேதனை தெரிவித்தனர்.
அரசு துறைகளில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளபோது, ஆண்டுதோறும் பத்தாயிரம் பணியிடங்களை நிரப்ப முயற்சிக்கும் அரசு, அமைச்சுப் பணியாளர்களுக்கான வாய்ப்புகளை குறைக்கக் கூடாது. இந்த நடவடிக்கையால் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.
இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். எனவே அமைச்சுப் பணியாளர்களுக்கென கூடுதல் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.