UPDATED : அக் 07, 2025 08:51 AM
ADDED : அக் 07, 2025 08:56 AM

சென்னை:
'அறிவியல் சார்ந்த கல்வி சுற்றுலா செல்லும்போது, மாணவர்களை நீர்நிலைக்கு அழைத்துச் செல்ல கூடாது' என, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:
அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, 'ஸ்டீம்' திட்டத்தின் கீழ் அறிவியல் சார்ந்த, கல்வி சுற்றுலா நடத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கல்வித் திறன், வருகை பதிவு, முக்கிய தேர்வுகளில் பங்கேற்பு, குழு செயல்பாடுகளில் ஈடுபாடு, கலைத் திருவிழா நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள், புத்தகம் படிக்கும் பழக்கம், தலைமைத்துவம் ஆகிய பிரிவுகளில் மதிப்பீடு செய்து, மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
கல்வி சுற்றுலாவுக்கு, அருகில் உள்ள பிற மாவட்டங்களையும், பிற மாநிலங்களையும் தேர்வு செய்யலாம். கல்வி சுற்றுலாவில் மாணவர்களின் ஒழுக்கத்தை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களை நீர்நிலைகளுக்கு அழைத்து செல்லக் கூடாது. கல்வி சுற்றுலாவில் மாணவியர் இருந்தால், பெண் ஆசிரியர்கள் கட்டாயம் குழுவில் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.