UPDATED : ஜூன் 24, 2025 12:00 AM
ADDED : ஜூன் 24, 2025 09:16 AM

கலபுரகி:
கவர்னர் அனுமதி அளித்தவுடன், குல்பர்கா பல்கலைக்கழக பி.எட்., தேர்வு முறைகேடுகள் குறித்து சி.ஐ.டி., விசாரணை நடத்தப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்தார்.
கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
குல்பர்கா, ராய்ச்சூர், ஷிவமொக்கா உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதுகுறித்து முதற்கட்ட அறிக்கை சேகரித்து வருகிறேன். இந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
குல்பர்கா பல்கலைக்கழக பி.எட்., தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்த முதற்கட்ட அறிக்கை ஏற்கனவே அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னரின் அனுமதி கிடைத்தவுடன், சி.ஐ.டி., போலீசாரிடம் விசாரணை ஒப்படைக்கப்படும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

