கையடக்க ப்ளூட்டோ ரோபோ: சென்னை ஐஐடி மற்றும் சிஎம்சி வேலூர் இணைந்து உருவாக்கம்
கையடக்க ப்ளூட்டோ ரோபோ: சென்னை ஐஐடி மற்றும் சிஎம்சி வேலூர் இணைந்து உருவாக்கம்
UPDATED : ஜன 17, 2025 12:00 AM
ADDED : ஜன 17, 2025 05:50 PM

சென்னை:
சென்னை ஐஐடி மற்றும் சிஎம்சி வேலூர் இணைந்து ப்ளூட்டோ எனும் மருத்துவத்துறையில் பயன்படுத்தக்கூடிய கையடக்க ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
இந்த ரோபோவிற்கு தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO ICSR) உரிமம் வழங்கியுள்ளது. மருத்துவமனைகள், வீடுகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ப விலைகுறைந்த மறுவாழ்வுத் தீர்வுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த புதுமையான சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ளூட்டோ இந்தியாவில் உள்ள வீடுகளில் சோதிக்கப்பட்ட முதலாவது ஒரே உள்நாட்டு ரோபோவாகும். கடந்த நான்காண்டுகளில் ப்ளூட்டோவினால் 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
இந்த தயாரிப்பு, கல்வி ஆராய்ச்சி, மேலும் சாமானிய மக்களைச் சென்றடையும் தயாரிப்பாக மாற்றப்பட்டால் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு பயனளிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். காப்புரிமை பெறப்பட்ட இத்தொழில்நுட்பம் துல்லியமான சிகிச்சை இயக்கங்களையும், நிகழ்நேர தரவுகளையும் வழங்குகிறது. பக்கவாதம், முதுகுத்தண்டு காயம், தண்டுவட மரப்புநோய் (multiple sclerosis), பார்கின்சன் நோய், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய நோயாளிகள் உள்ளிட்டோருக்கு சிறந்த பயனளிக்கிறது.
இது குறித்து சென்னை ஐஐடி-ன் டிடிகே மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டு மையத்தின் தலைவருமான பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் கூறுகையில், பக்கவாதத்திற்குப் பிந்தைய நிலைமைகளுக்கு ஏற்ப மலிவு விலையில், அணுகக் கூடிய தீர்வை வழங்குவதன் மூலம் நோயாளிகளின் மறுவாழ்வில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருப்பதால் வீட்டிலோ படுக்கையிலோ சரியான நேரத்தில் நிலையான சிகிச்சையை செயல்படுத்த முடிகிறது, என்றார்.