UPDATED : ஏப் 11, 2025 12:00 AM
ADDED : ஏப் 11, 2025 08:46 AM
சென்னை:
பல்கலை வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும் என, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்த தி.மு.க., இப்போது ஜெயலலிதாவை பின்பற்றுவது மகிழ்ச்சி என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு கவின் கலை பல்கலை வேந்தராக, மாநில முதல்வர் இருக்கும் வகையில், சட்டத்தை நிறைவேற்றி அமல்படுத்தியவர் ஜெயலலிதா. அதை இப்போது நினைவுகூர்வது பொருத்தமானது. இதேபோல், மீன்வளப் பல்கலை சட்டத்தை இயற்றியவரும் ஜெயலலிதாவே. மாநில உரிமை பேசும் தி.மு.க., அப்போது, சென்னை பல்கலைக்கும், மதுரை காமராஜர் பல்கலைக்கும், முதல்வரே வேந்தராக இருக்க வேண்டும் என, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்தை, கடுமையாக எதிர்த்தது.
அப்போதைய கவர்னர் சென்னா ரெட்டி வாயிலாக, அதற்கு முட்டுக்கட்டை போட்டது தி.மு.க., பல்கலைகளுக்கு முதல்வரே வேந்தராவது நல்லதல்ல. கல்வியில் அரசியல் கலக்கக்கூடாது என, அப்போதைய கல்வி அமைச்சர் அன்பழகன், சட்டசபையில் தெரிவித்தார்.
எனினும், பல்கலைகளுக்கு வேந்தர் நியமனம் குறித்து, ஜெயலலிதா முன்னெடுத்த முயற்சிக்கு, இத்தீர்ப்பின் வழியாக வெற்றி கிடைத்துள்ளது. அன்றைக்கு ஜெயலலிதா செய்ததை, இப்போதாவது தி.மு.க., அரசு பின்பற்றுகிறதே. அதுவே மகிழ்ச்சிக்குரியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

