மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம்; தலைமையாசிரியர்கள் அதிருப்தி
மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம்; தலைமையாசிரியர்கள் அதிருப்தி
UPDATED : ஆக 04, 2025 12:00 AM
ADDED : ஆக 04, 2025 03:25 PM

மதுரை:
கல்வித்துறையில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.19 கோடியில் செயல்படுத்தப்படும் திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தில் போதிய திட்டமிடல் இல்லை என தலைமையாசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மாநில அடைவுத் தேர்வு (சிலாஸ்) முடிவின்படி அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழி, கணிதத்திறன்களை மேம்படுத்த இந்தாண்டு ரூ.19 கோடியில் திறன் (டி.எச்.ஐ.ஆர்.ஏ.என்) வளர்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மொழி, கணிதப்பயிற்சியில் கவனம் தேவைப்படும் (போக்கஸ்) மாணவர்களுக்கு, கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு வகுப்புகள் ஆக.,1 முதல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வகுப்புகளை காலை 9:30 முதல் மதியம் 3:30 மணி வரை நடத்த வேண்டும். ரெகுலர் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்களே இவற்றையும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட குளறுபடிகள் இருப்பதால் நோக்கம் நன்றாக இருந்தும் அதை செயல்படுத்தும் முறை சொதப்பலாக உள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
இத்திட்டத்தால் மாநில அளவில் 3 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என்பது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு பள்ளியிலும் 15 முதல் 30 பேர் வரை 'போக்கஸ்' மாணவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். ரெகுலர் வகுப்புகள் தலா 40 நிமிடங்கள் உள்ள நிலையில் சிறப்பு வகுப்புக்கு ஒன்றரை மணிநேரம் ஒரு பாடவேளை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெகுலர் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்களே சிறப்பு வகுப்பும் நடத்த வேண்டும் என்பது பெரும் சவாலான விஷயம். சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் வழக்கம் போல் காலாண்டு, அரையாண்டு தேர்வை எழுத வேண்டும் என்கின்றனர்.
இது எவ்வாறு சாத்தியம். ரெகுலர், சிறப்பு வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரே வினாத்தாள் என்றால் சிறப்பு வகுப்பு திட்டமே தேவையில்லை. எனவே முதற்கட்டமாக காலாண்டு தேர்விலாவது அவர்களுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்திட்டத்திற்கு ரூ.19 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், சிறப்பு வகுப்புக்கு என கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அல்லது தகுதியுள்ள இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களை நியமிப்பது உட்பட களநிலவரம் குறித்து தலைமையாசிரியர்கள் ஆலோசனைக்கு ஏற்ப இத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.