குட் டச், பேட் டச் புரிந்து கொண்ட சிறுமிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு
குட் டச், பேட் டச் புரிந்து கொண்ட சிறுமிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு
UPDATED : பிப் 20, 2025 12:00 AM
ADDED : பிப் 20, 2025 12:13 AM
மும்பை :
தவறான நோக்கத்துடன் தொடப்படுவதை சரியாக புரிந்து கொண்ட சிறுமிக்கு பாராட்டு தெரிவித்துள்ள மும்பை உயர் நீதிமன்றம், அச்சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட ராணுவ அதிகாரிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது.
வழக்கு ஒன்றில், மும்பை உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
லெப்டினென்ட் கர்னல் அந்தஸ்தில் உள்ள ராணுவ அதிகாரி, தனக்கு கீழ் பணியாற்றும் வீரர் ஒருவரின் குடும்பத்தாரை 2020ல் வரவழைத்து சந்தித்துள்ளார். அப்போது அந்த வீரர் இல்லாத நேரத்தில், அவரது 11 வயது மகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
குட் டச், பேட் டச் எனப்படும் எது நல்ல தொடுதல், தவறான தொடுதல் என்பதை, அந்த சிறுமி நன்கு புரிந்து கொண்டுள்ளார். தன்னிடம் தவறாக நடக்க முயன்றதை அடுத்து, உடனடியாக அவர் குரல் எழுப்பி தன் தந்தையை வரவழைத்துள்ளார்.
ஒரு தந்தையாக, தாத்தாவாகவே அந்தக் குழந்தையிடம் முத்தம் கேட்டதாக ராணுவ அதிகாரி கூறியுள்ளார். ஆனால், சிறுமியின் வாக்குமூலங்கள், அவரிடம் அந்த அதிகாரி தவறான நோக்கத்துடன் தொட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராணுவ போலீஸ் மற்றும் ராணுவ நீதிமன்றங்களின் விசாரணைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அதன்படி, போக்சோ சட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்கிறோம். தவறான தொடுதல் எது என்பதை சரியாக புரிந்து கொண்ட சிறுமிக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

