அரசு பள்ளிகளில் நுாலக புத்தகங்கள் உள்ளதா உயர்நீதிமன்றம் கேள்வி
அரசு பள்ளிகளில் நுாலக புத்தகங்கள் உள்ளதா உயர்நீதிமன்றம் கேள்வி
UPDATED : ஜூலை 29, 2024 12:00 AM
ADDED : ஜூலை 29, 2024 09:38 AM

மதுரை:
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளின் ஒவ்வொரு வகுப்பிற்கும் நுாலக புத்தகங்களாக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற விபரத்தை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நுாலகராக பணிபுரிந்தவர் பணி ஓய்வு பெற்றார். நுாலகராக 2019 ல் ஜெயஸ்ரீ நியமிக்கப்பட்டார். இதற்கு பள்ளி நிர்வாகம் பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்புதல் கோரியது.
தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் நிராகரித்தார். அதை ரத்து செய்து ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி பள்ளி தாளாளர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
தனிநீதிபதி, நுாலகர் பதவியில் இருப்பவர் ஓய்வு பெறும்போது அல்லது பதவி உயர்வு பெறும்போது, அப்பணியிடம் காலாவதியாகிவிடும். அரசிடம் பணியிடத்தை ஒப்படைக்க வேண்டும். புதிய நுாலகரை நியமிக்க நிர்வாகத்திற்கு அனுமதி இல்லை. இது அரசாணையில் உள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாளாளர் மேல்முறையீடு செய்தார்.
ஏற்கனவே விசாரணையின்போது அரசு தரப்பு:
உதவி பெறும் தனியார் பள்ளிகளில் நுாலகர், நுாலக உதவியாளர் பணி ஓய்வு அல்லது இடமாற்றம் அல்லது பதவி உயர்வு பெற்றால் அப்பணியிடம் நீக்கப்படும். இது பள்ளிக் கல்வித்துறையின் (2018) அரசாணையில் உள்ளது.
மனுதாரர் பள்ளி ஒப்புதல் கோருவது விதிகளுக்கு எதிரானது. இதனால் ஒப்புதல் மறுக்கப்பட்டது. இதை தனி நீதிபதி உறுதி செய்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது.
மீண்டும் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு:
அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு வகுப்பிற்கும், பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவை வகுப்பறை அலமாரிகளில் உள்ளன. ஆசிரியரின் வழிகாட்டுதல்படி மாணவர்கள் விருப்பப்படி புத்தகங்களை எடுக்க அனுமதிக்கப்படுவர்.
இதற்காக மின் ஆளுமை செயலி (இ-கவர்னன்ஸ் ஆப்) பயன்படுத்தப்படுகிறது. இம்முறையின் கீழ் மாணவர்கள் புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்:
பள்ளிகளின் ஒவ்வொரு வகுப்பிற்கும் நுாலக புத்தகங்களாக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற விபரங்களை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ஜூலை 31ல் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.