UPDATED : நவ 13, 2024 12:00 AM
ADDED : நவ 13, 2024 04:57 PM

சென்னை:
உயர் கல்வியில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு, அவர்களின் கல்வி இறுதி ஆண்டில், திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக, பண உறுதி ஆவணம் வழங்கும், உயர் திறன் ஊக்கத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா வெளியிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், 12,000, 15,000, 25,000 ரூபாய் என, மூன்று பிரிவுகளில் பண உறுதி ஆவணம் வழங்க, 41 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில், கல்லுாரி முதலாம் ஆண்டில் இருந்து அனைத்து ஆண்டுகளிலும், அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து விண்ணப்பங்களும் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்த பின், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பண உறுதி ஆவணம் வழங்கப்படும்.
பண உறுதி ஆவணம் பெறப்பட்ட ஆறு மாதங்களுக்குள், பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை பெறாத மாணாக்கரின் பண உறுதி ஆவணம் நிராகரிக்கப்படும்.