உயர்கல்வி பாடத்திட்டம் விரைவில் மாற்றம்; அமைச்சர் கோவி.செழியன் தகவல்
உயர்கல்வி பாடத்திட்டம் விரைவில் மாற்றம்; அமைச்சர் கோவி.செழியன் தகவல்
UPDATED : டிச 13, 2024 12:00 AM
ADDED : டிச 13, 2024 06:15 PM
சென்னை:
உயர்கல்வி பாடத்திட்டங்களில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
உயர்கல்வித் துறையில் பங்களிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னைப் பல்கலையில் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக கல்வியை முன்னேற்ற ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. திருச்சி, கோவை, மதுரை மண்டலத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னையில் கடந்த வாரம் துவங்கிய கூட்டம், இன்று நிறைவடைகிறது.
கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் இடையில் இருக்கும் பிரச்னைகள் தொடர்பாக, அனைவரின் கருத்துக்களையும் அறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கற்றல், கற்பித்தல், தேர்வு, நோக்கத்தின் அடைவு என்ற தொடர் நிகழ்வில், சில தொடர்புகள் துண்டிக்கப்படுவதால், நம் நோக்கத்தை முழுமையாக அடைய முடியவில்லை.
படிப்பை முடிக்கும் மாணவர்கள், வீதியில் இருக்கக் கூடாது; வேலையில் இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். ஆனால், வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்கள், மாணவர்களின் திறன், வேலை வாய்ப்புக்கு உகந்ததாக இல்லை என தெரிவித்துள்ளன.
அவர்களின் ஆலோசனை அடிப்படையில், பயனில்லாத படிப்புகளுக்கு பதில், புதிய படிப்புகளை சேர்ப்பதா அல்லது பாடத்திட்டங்களில் மாற்றங்களை செய்வதா என்பது குறித்து முடிவு செய்து, உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
கோவையில் நடந்த கூட்டத்தில், ஒரு மாணவர், 'நான் முதல்வன்' திட்டத்தில் பங்கேற்றபோது, ஆங்கில வழிப் பாடங்கள் புரியவில்லை என்றார். அவரைபோல் வேறு யாரும் பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தமிழிலும் வகுப்புகளை நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.
சென்னை பல்கலையில், ஆராய்ச்சி மாணவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக, புகார் உள்ளது. இது குறித்து ஆலோசித்து, மாணவர்கள் பாதிக்காதபடி முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, கல்லுாரி கல்வி இயக்கக கூட்டரங்கில் நடந்த முதல்வர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில், அமைச்சர் கோவி.செழியின் பங்கேற்றார்.
விழாவில், 69 மாணவ - மாணவியருக்கு, முதல்வர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைக்கான ஆணைகளையும், மதிராஜா, விக்னேஷ்வரி ஆகியோருக்கு, பாரதி இளங்கவிஞர் விருதாக, தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கினார்.