உயர்கல்வி நுழைவுத்தேர்வு பயிற்சி 10 அரசுப் பள்ளிகளில் துவக்கம்
உயர்கல்வி நுழைவுத்தேர்வு பயிற்சி 10 அரசுப் பள்ளிகளில் துவக்கம்
UPDATED : ஜூன் 13, 2025 12:00 AM
ADDED : ஜூன் 13, 2025 08:18 AM

தேனி:
மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 10 அரசுப்பள்ளிகளில் நடக்கிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அடுத்த ஆண்டிற்கான நீட், ஜே.இ.இ., கிளாட், நெஸ்ட் உள்ளிட்ட 19 உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தோறும் நடக்க உள்ளது.
இதற்காக 10 அரசுப்பள்ளிகள் பயிற்சி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு ஹை டெக் ஆய்வகம் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தலா 8 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயிற்சி பெறும் மாணவர்கள் பற்றிய தகவல்கள் எமிசில் பதிவு செய்யப்படும்.
மாணவர்கள் மதிப்பெண் அடிப்படை, விருப்ப அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்சிகள் ஜூலை முதல் டிசம்பர் வரை, பொதுத்தேர்வு முடிந்த பின் நுழைவுத்தேர்வுகள் வரை நடக்கிறது.
பயிற்சி மையங்கள் செயல்பட உள்ள பள்ளிகள்: ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போடி 7 வது வார்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சின்னமனுார் வட்டாரம் ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மயிலாடும்பாறை வட்டாரம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் வி.எம்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி.

