பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அதிக சம்பளம்; தொழில்நுட்பக் கல்வித்துறையில் நிலவும் அவலம்
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அதிக சம்பளம்; தொழில்நுட்பக் கல்வித்துறையில் நிலவும் அவலம்
UPDATED : டிச 29, 2024 12:00 AM
ADDED : டிச 29, 2024 08:32 AM

கோவை:
தொழில்நுட்பக் கல்வித்துறையின் கீழ், அரசு இன்ஜி., பாலிடெக்னிக் கல்லுாரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்கள் என, 70க்கு மேற்பட்ட கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் அலுவலக இளநிலை உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சியே கல்வித்தகுதி.
தொழில்நுட்ப கல்வித்துறையில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அரசு ஊழியர்களின் வாரிசுகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
பிற அரசுத்துறைகளில் இளநிலை உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற, துறை ரீதியான தேர்வுகள், சிறப்பு தேர்வுகள் அல்லது கூடுதல் கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், தொழில்நுட்பக் கல்வித்துறையில், இளநிலை உதவியாளராக உள்ளவர்கள், பதவி உயர்வுக்கான எவ்வித கூடுதல் தகுதியுமின்றி, லட்சக்கணக்கான ரூபாய் ஊதியம் பெறுவதாக, பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பல்வேறு உயர் பதவிகளில், 10ம் வகுப்பு கல்வித் தகுதியுடன் பணிபுரிவதாக தெரிவிக்கின்றனர்.தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், பெறப்பட்ட தகவலில் இது கண்டறியப்பட்டுள்ளது. இதை உடனடியாக மாற்ற, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராசிரியர்கள் கூறியதாவது:
அரசின் அனைத்து துறைகளிலும், இளநிலை உதவியாளர் பணியிடத்தில் இருந்து பதவி உயர்வுக்கு, டி.என்.ஜி.ஓ.எம்.,(தமிழ்நாடு அலுவலக நடைமுறை தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த அரசாணை, தொழில்நுட்பக் கல்வித்துறையில் பின்பற்றப்படுவதில்லை.
துறையில் காலியாக உள்ள பணியிடங்களை, 50 சதவீதம் நேரடி நியமனம் வாயிலாக நிரப்ப வேண்டும் என்ற அரசாணையும் பின்பற்றப்படுவதில்லை. ஆனால் இவர்களில் சிலர், லட்சக்கணக்கான ரூபாய் ஊதியம் பெறுகின்றனர்.
இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கல்லுாரி கல்வித்துறை போல், உதவியாளர், கண்காணிப்பாளர், பொருளாளர், கல்லுாரி முதல்வரின் நேர்முக உதவியாளர் பதவிகளுக்கான பணி நியமன விதியில், அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும்.
அரசின் பணி நியமன விதிகளை பின்பற்றாமல், வழங்கிய நியமனங்கள், பதவி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.