புதுச்சேரியில் 69 பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
புதுச்சேரியில் 69 பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
UPDATED : ஆக 18, 2026 01:30 PM
ADDED : ஆக 18, 2026 01:32 PM
புதுச்சேரி:
ஒருங்கிணைந்த போட்டி தேர்வு நடக்கும் 69 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த பட்டதாரி போட்டி தேர்வு வரும், 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்வு மையங்களாக செயல்படும், 69 பள்ளிகளுக்கு வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை, துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
ஒருங்கிணைந்த போட்டி தேர்வை சுமூகமாக நடத்தும் வகையில் புதுச்சேரி பிராந்தியத்தில் 69 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவை 82 தேர்வு மையங்களாகச் செயல்படவுள்ளன.
தேர்வுக்கான முன் ஏற்பாடுகள் மற்றும் தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்வு மையங்களாக செயல்படும் 69 பள்ளிகளுக்கு மட்டும் வரும், 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்கள், விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த பள்ளிகளின் பட்டியல் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், பின்னர் வகுப்புகள் நடத்தப்படும். அதற்கான தேதிகள் மற்றும் கால அட்டவணை பள்ளி கல்வித்துறையால் தனியாக அறிவிக்கப்படும்.
தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தேர்வு முகமைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், விடுமுறை குறித்த இந்த அறிவிப்பு புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்வு மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 69 பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
