மதிப்பெண்ணுக்கு ஏற்ப உயர்கல்வி படிப்புகளை தேர்வு செய்வது எப்படி?
மதிப்பெண்ணுக்கு ஏற்ப உயர்கல்வி படிப்புகளை தேர்வு செய்வது எப்படி?
UPDATED : மார் 29, 2026 12:58 PM
ADDED : மார் 29, 2026 01:01 PM
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாலை அமர்வில் நிபுணர்கள் பேசியதாவது:
வணிக படிப்புக்கு நல்ல எதிர்காலம்
'வணிகப் படிப்புகள்' குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் செல்வராஜ் பேசியதாவது:
வணிகவியல் படிப்புகள் அனைத்தும் வேலை வாய்ப்புகள் உள்ளவை. பி.காம்., பேங்கிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், அக்கவுண்டிங் அண்ட் பைனான்ஸ், பி.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகளும், சி.ஏ., சி.எஸ். சி.எம்.ஏ., உள்ளிட்ட புரபெஷனல் படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. சி.ஏ., படிப்பு கடினமானது என்ற கருத்து தவறு.
நான்கு மாதங்கள் முறையாக படித்தால் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பவுண்டேஷன் நிலை தேர்தல் வெற்றி பெறலாம். ஆர்வம், கடின உழைப்பு இருந்தால் பட்டப் படிப்பு முடித்து நேரடியாக இன்டர்மீடியேட், அதையடுத்து பைனல் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதிக்கலாம்.
ஏ.சி.சி.ஏ., படித்தால் உலகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி உட்பட சில கல்லுாரிகள் ஏ.சி.சி.ஏ.,யுடன் ஒருங்கிணைந்த பாடத் திட்டங்களை கொண்டுள்ளன. அது போன்ற கல்லுாரிகளை தேர்வு செய்யலாம்.
சி.ஏ.,வுடன் ஏ.சி.சி.ஏ., படித்து எம்.என்.சி., கம்பெனிகளுக்கும் ஆடிட்டர்களாக பணியாற்றலாம். உலக அளவில் இந்திய ஆடிட்டர்களுக்கு அதிக தேவை உள்ளது. படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும், சுயதொழில் துவங்க வேண்டும் என்றால் வணிகவியல் சார் படிப்புகளை தேர்வு செய்யலாம்.
நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்
மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி டில்லி பாபு பேசியதாவது:
அறிவியலில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவருக்கும் விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவு இருக்கும். விஞ்ஞானிகளுக்கு எல்லாம் ரோல் மாடலாக இன்றும் இருப்பவர், அப்துல் கலாம். ஆர்வம், உழைப்பு இருந்தால் டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாகலாம். அதற்கான நுழைவுத் தேர்வுகள் உள்ளன.
டி.ஆர்.டி.ஓ., வில் தற்போது பெண்கள் அதிகம் தேர்வாகின்றனர். 'கேட்' 'செட்' தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று விஞ்ஞானியாக தேர்வு பெறலாம். இது தவிர இஸ்ரோ, அறிவியல் தொழில்நுட்பம், அணுசக்தி துறைகளிலும் பணிவாய்ப்பு பெறலாம்.
சாதிக்க வேண்டும் என எண்ணம் உள்ளவர்கள் அதற்காக பிரத்யேகமாக உழைக்க வேண்டும்.
டி.ஆர்.டி.ஓ., வின் கீழ் ஆய்வுக் கூடங்கள், ராணுவ டேங்க், கப்பல், நீர்மூழ்கி கப்பல் உட்பட தரை, ஆகாயம், கடல்சார் உபகரணங்கள், தளவாடங்கள் தயாரிக்கப்படுகின்றன.
மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், வேளாண்மை என எந்த படிப்புகளை படித்தாலும் புதுமையாக சிந்திக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மெக்கானிக், சிவில், இ.சி.இ., ஏரோ ஸ்பேஸ், சி.எஸ்., ஐ.டி., கெமிக்கல் இன்ஜி., உள்ளிட்டவை படித்தால் டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாக ஆகும் வாய்ப்பு உள்ளது.
கல்விக் கடன் பெறுவது எளிதே
விருத்தாசலம், வங்கியாளர் (ஓய்வு): வங்கிக் கடன் பெறுவது சிரமம் இல்லை. நாட்டில் 2025 வரை கல்விக் கடனாக ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் கோடியை வங்கிகள் வழங்கியுள்ளன. இதன் மூலம் 35 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். அங்கீகாரம் பெற்ற அனைத்து இளங்கலை, முதுகலை, மருத்துவம், சட்டம், வேளாண், பொறியியல் படிப்புகளுக்கும் வங்கிக் கடன் பெறும் வசதி உள்ளது.
அதற்கு உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். படிப்பு முடியும் வரை ஆகும் அனைத்து செலவுகளும் கடனில் அடங்குகிறது. கல்விக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு கூட குறிப்பிட்ட தொகை கடன் பெறலாம்.
அதற்காக கல்வி நிறுவனங்களில் இருந்து செலவு பட்டியல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாணவிகளுக்கு வட்டியில் அரை சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
படிப்புக்கு ஏற்ப ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம். படிப்பு முடித்தவுடன் ஓராண்டுக்கு பின் கடனை திருப்பி செலுத்த வேண்டும். வேலை கிடைத்து விட்டால் 6 மாதங்களில் கடனை செலுத்த தொடங்க வேண்டும்.
வேலைவாய்ப்பு படிப்புகள்
கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா: பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம் என்பதை பெற்றோர், மாணவர் இணைந்து தேர்வு செய்ய வேண்டும். எந்த படிப்பில் ஆர்வம் உள்ளது என்பதை விட எந்த படிப்பை படிக்க முடியும் என்பதை மனதில் வைத்து பாடப் பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
அறிவியல் பிரிவு மாணவர்களின் முதல் தேர்வாக மருத்துவம் இருக்கும். நீட் தேர்வில் தேர்ச்சி வேண்டும்.
நீட் தேர்வு தேவை இல்லாத கண் மருத்துவப் படிப்பு, நர்சிங், உட்பட 30க்கும் மேற்பட்ட இணை மருத்துவப் படிப்புகளை தேர்வு செய்யலாம். மீன் வளர்ப்பு, வேளாண், வனத்துறை படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்யலாம். 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
பிளஸ் 2வில் 190க்கு மேல் 'கட்ஆப்' மதிப்பெண் இருந்தால் அண்ணா பல்கலை, அரசு பொறியியல் கல்லுாரிகளில் விரும்பிய பிரிவுகளை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
'கட் ஆப்' குறையும் போது உதவிபெறும், தனியார் பொறியியல் கல்லுாரிகளில் கிடைக்கும். ஆர்க்கிடெக்சர் படிப்புகளுக்கு 'நாட்டா', சட்டப் படிப்புக்கு 'கிளாட்' நுழைவு தேர்வு எழுத வேண்டும்.
ஓவியம் வரைவது, கிரியேட்டிவ் சிந்தனை திறன் உள்ளோர் பி.எப்.ஏ., என்ற பைன் ஆர்ட்ஸ் படிப்பை தேர்வு செய்யலாம். பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., மீடியா, விளம்பரம், அனிமேஷன், எலக்ட்ரானிக்ஸ் மீடியா சார் படிப்புகளை தேர்வு செய்யலாம். இவ்வாறு பேசினர்.
