ஓட்டு சாவடிகளாக பயன்படுத்திய பள்ளிகளை சுத்தம் செய்வது எப்படி? விளக்கம் கேட்கும் ஐகோர்ட்
ஓட்டு சாவடிகளாக பயன்படுத்திய பள்ளிகளை சுத்தம் செய்வது எப்படி? விளக்கம் கேட்கும் ஐகோர்ட்
UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 01:07 PM

சென்னை:
தேர்தல் முடிந்த பின், ஓட்டுச் சாவடிகளாக பயன்படுத்தப்பட்ட பள்ளிகளை சுத்தப்படுத்துவது தொடர்பாக, ஏதாவது விதிமுறைகள் உள்ளதா என்பதற்கு, தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனு:
லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் போது, ஓட்டுச் சாவடிகளில் வாக்காளர்களின் தெரு, பகுதி, வேட்பாளர்கள் விபரங்களை வைக்க வேண்டும்.
ஓட்டுச் சாவடிக்குள், வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஓட்டுப்பதிவு செய்யும் இடம், அடையாள மை வைக்கும் இடம் குறித்த அறிவிப்பு வைக்க வேண்டும். இந்த அறிவிப்புகளை, பேப்பர் மற்றும் அட்டையில் தயார் செய்து சுவரில் ஒட்டுகின்றனர்.
சுவர்களுக்கு பாதிப்பு
பெரும்பாலும் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் தான், ஓட்டுச் சாவடிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பள்ளிகளின் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேசத் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள், பெயர்கள், சுற்றுச்சூழல் குறித்த படங்கள், செய்திகள், பள்ளிகளில் பல வர்ணங்களில் தீட்டப்படுகின்றன.
ஓட்டுச் சாவடிகளாக பள்ளிகளை பயன்படுத்தும் போது, ஏற்கனவே உள்ள விழிப்புணர்வு படங்கள், செய்திகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தேர்தலுக்கு தயார் செய்ய, ஒரு ஓட்டுச் சாவடிக்கு 650 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேர்தல் முடிந்த பின், ஓட்டுச் சாவடியை சுத்தம் செய்ய, பணம் ஒதுக்கப்படுவது இல்லை.
எனவே, தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை, ஓட்டுச் சாவடிகளில் ஒட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்குப் பின், ஓட்டுச் சாவடிகளை சுத்தப்படுத்த நிதி ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
தேர்தலுக்கு பின் ஓட்டுச் சாவடிகளை சுத்தம் செய்து கொடுக்க, விதிமுறைகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை டிசம்பர் 12க்கு தள்ளி வைத்தது.
பஞ்சாயத்து தேர்தல்
அ.தி.மு.க., வழக்கறிஞர் அணியின் மாநில துணை செயலரான மதுரைவீரன் தாக்கல் செய்த மனுவில், பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கு, தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலை தரும்படி, மாநில தேர்தல் ஆணையம் கோரி உள்ளது. தற்போதைய வாக்காளர் பட்டியலில் இருந்து, இறந்தவர்கள் மற்றும் இடம் மாறியவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் நெடுஞ்செழியன் வாதாடினார். மனுவுக்கு பதில் அளிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.