20 ஆண்டுகளில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் கால் வைப்பார்கள்
20 ஆண்டுகளில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் கால் வைப்பார்கள்
UPDATED : ஆக 18, 2026 01:27 PM
ADDED : ஆக 18, 2026 01:28 PM
காரைக்குடி:
நாசா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் கால் வைப்பார்கள். என, நாசா விண்வெளி வீரர் டான் தாமஸ் தெரிவித்தார்.
காரைக்குடி ஸ்ரீ ராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் சார்பில் அறிவியல் மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்தின் சமீபத்திய போக்குகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமையேற்றார்.
சென்னை நாசா, சி.இ.ஓ., காயம் பூ ராம லிங்கம் தொடக்க உரையாற்றினார். நாசாவின் விண்வெளி வீரர் டான் தாமஸ் விண்வெளி சென்று வந்த அனுபவம் குறித்து பேசினார். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் விண்வெளி வீரருடன் கலந்துரையாடினர்.
விண்வெளி வீரர் டான் தாமஸ் கூறுகையில், கல்பனா சாவ்லாவுடன் ஓராண்டு பணிபுரிந்துள்ளேன். கடினமாக உழைக்கும் விண்வெளி வீரர் அவர். சுனிதா வில்லியம்சின் தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர். இவ்விருவரும் நல்ல நண்பர்கள். சிறு வயதிலேயே விண்வெளி வீரராக ஆசைப்பட்டேன்.
விண்வெளி வீரர் ஆவது எளிதல்ல கடினமாக உழைக்க வேண்டும். நாசாவில் விண்ணப்பித்து 3 முறை நிராகரிக்கப் பட்டேன். சோர்ந்து போகாமல் பைலட் பயிற்சி மற்றும் பாராசூட் குதித்தல் கற்றுக்கொண்டு விண்ணப்பித்த போது 4வது முறை, 39 வயதில் எனது கனவு நனவானது. மாணவர்கள் தினமும் கடினமாக உழைக்க வேண்டும். முயற்சி செய்தால் வாழ்வில் சாதனை நிகழ்த்த முடியும்.
விண்வெளியில் கீழ் மற்றும் மேல் என்று திசை கிடையாது. தலை இருக்கும் திசையே மேல். கால் இருக்கும் திசையே கீழ். விண்வெளியில் உணவு உறைந்து உலர்த்தப்பட்ட உணவாகவே இருக்கும்.
முதன்முதலில் விண்வெளிக்கு பீட்சாவை கொண்டு சென்று சாப்பிட்டது நான் தான். சுவரில் மாட்டப்பட்ட ஸ்லீப்பிங் பேக் உள்ளே சென்று கட்டிக்கொண்டு தான் தூங்க முடியும். ஈர்ப்பு விசை இல்லாததால் தசை எலும்பு பலவீனமடையும். அதை தடுக்க தினமும் 45 நிமிடங்கள் சிறப்பு மிதிவண்டியில் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் அனில்மேனன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். நாசா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் கால் வைப்பார்கள்.
இன்று இருக்கும் மாணவர்களாகிய நீங்கள் தான் செவ்வாய் கிரகம் செல்லக்கூடிய தலைமுறை. உங்களில் ஒருவர் தான் செவ்வாய் கிரகத்தில் கால் வைக்கும் முதல் மனிதராக இருக்கப் போகிறீர்கள், என்றார்.
