சிறுவர் மலருக்காக காத்திருப்பேன் அரசு செயலர் கேசவன் சுவாரசியம்
சிறுவர் மலருக்காக காத்திருப்பேன் அரசு செயலர் கேசவன் சுவாரசியம்
UPDATED : ஜூன் 04, 2024 12:00 AM
ADDED : ஜூன் 04, 2024 11:12 AM

புதுச்சேரி:
தினமலர் சிறுவர் மலர் இதழை படிக்க வெள்ளிக்கிழமைக்காக காத்திருப்பேன் என, புதுச்சேரி சிறுவர் திரைப்பட விழாவில், அரசு செயலர் கேசவன் பேசினார்.
புதுச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் இணைந்து நடத்தும், இரு நாள் சிறுவர்கள் திரைப்பட திருவிழா, அலையன்ஸ் பிரான்சிஸ் கலையரங்கில் நேற்று துவங்கியது.
புதுச்சேரி அறிவியல் இயக்க துணைத் தலைவர் ேஹமாவதி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ராஜா நோக்க உரையாற்றினார். புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் நல்லாம் சதீஷ், இயக்குநர் லாரன்ட் ஜாலிகூஸ் ஆகியோர் பங்கேற்று பேசினர். அறிவியல் இயக்க தலைவர் மதிவாணன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அரசு செயலர் கேசவன் பேசியதாவது:
நாங்கள் ராமாயணம், மகாபாரத கதைகளை வாசித்து, எப்படி கற்பனை செய்து பார்த்தாமோ, அதெல்லாம், தற்போது, சிறுவர்களுக்கு காட்சி வடிவிலேயே கிடைக்கிறது. தற்போது தினமலர் நாளிதழின் சிறுவர் மலரை நீங்கள் எத்தனை பேர் படிக்கிறீர்கள் என தெரியாது.
ஆனால் எங்களுடைய காலத்தில் எல்லாமே சிறுவர் மலர் தான். என்னுடைய சிறிய வயதில், தினமலர் நாளிதழின் சிறுவர் மலர் புத்தகத்தை விரும்பி வாசிப்பேன். அதற்காக எப்போது வெள்ளிக்கிழமை வரும் என, காத்திருப்பேன்.
அந்த புத்தகத்தில், படங்களுடன் கதைகள் விளக்கப்பட்டிருக்கும். கும்பகர்ணன் மூச்சு விடும் போது, மூக்கிற்குள் வீரர்கள் வந்து வந்து போவார்கள். கம்பனுடைய வரிகளை எல்லாம், படங்களாக கொடுத்திருப்பார்கள். எங்களுக்கு கிடைத்த காட்சி வடிவம் அது தான்.
சிறிய வயதில் பார்க்கும் காட்சிகள் மனதில் ஆழமாக பதிந்து விடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பார்க்கும் படங்கள், நல்ல காட்சி வடிவங்களாக இருக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் உலகத்திற்குள் பெரியவர்களால் வரவே முடியாது. குழந்தைகளின் உலகத்தை திரைப்படங்களாக எடுப்பது அவ்வளவு எளியது கிடையாது. இன்றைக்கு இதுபோன்ற திரைப்படங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்ற படங்களை நிறைய பாருங்கள். அதன் காட்சி வடிங்களை விவாதம் செய்யுங்கள். உங்களை நீங்களே திரும்ப பார்க்கக்கூடிய விஷயங்களை, வாய்ப்புகளை, இந்த படங்கள் கொடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.