ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி புறக்கணிப்பு? தமிழக அரசு மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டு
ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி புறக்கணிப்பு? தமிழக அரசு மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 27, 2024 12:00 AM
ADDED : ஜூன் 27, 2024 10:45 AM

சென்னை:
தமிழகத்தில், ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி துறைகள் புறக்கணிக்கப்படுவதாக, அத்துறை டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்திய மருத்துவ முறை சிகிச்சைகளை விரிவுப்படுத்தும் வகையில், ஆயுஷ் அமைச்சகம், சென்னை, தேனி, திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில், தலா 50 படுக்கை வசதியுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனை அமைக்க, 2018 - 19ல் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இம்மருத்துவமனைகளில், ஒருங்கிணைந்த இந்திய முறை மருத்துவ பிரிவுகள் இயங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், சித்தா மற்றும் யோகா, இயற்கை மருத்துவ பிரிவுகள் மட்டுமே செயல்படுகின்றன. மற்ற துறைகள் புறக்கணிக்கப்படுவதாக, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், சமீபத்தில் ஆயுஷ் மருத்துவ குழுவினர் சோதனையில், ஆயுர்வேதா போன்ற துறைகள் இருப்பதாகவும் கணக்கு காட்டப்பட்டதாக புகார் எழுந்தது.
ஆயுர்வேதா டாக்டர்கள் கூறியதாவது:
இந்திய மருத்துவ முறைகளை விரிவுப்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. குறிப்பாக, மத்திய அரசு 75 சதவீதம்; மாநில அரசு 25 சதவீத நிதி பங்களிப்புடன், இம்மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
மற்ற மாநிலங்களில், ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மட்டுமே செயல்படுகின்றன. ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி பிரிவுகளை மாநில அரசு புறக்கணித்து வருகிறது.
ஆயுர்வேதாவில் உள்ள, பஞ்சகர்மா சிகிச்சைக்கு, தமிழகத்தில் இருந்து பலர் கேரளா செல்கின்றனர். இச்சிகிச்சை, வசதி படைத்தவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒன்றாக உள்ளது. தமிழகத்திலேயே ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவ சிகிச்சை முறைகள் வழங்குவதன் வாயிலாக, அரசு மருத்துவமனையில் இலவசமாக பஞ்சகர்மா சிகிச்சை முறையை, ஏழை மக்களும் பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், சித்தா மற்றும் யோகா இயற்கை மருத்துவ பிரிவுகள் தலா, 25 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வருகின்றன. அதேநேரம், அரசு மருத்துவமனைகளில், ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி துறைகளும் செயல்படுகின்றன என்றனர்.