துருக்கி பல்கலையுடன் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது ஐ.ஐ.டி., மும்பை
துருக்கி பல்கலையுடன் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது ஐ.ஐ.டி., மும்பை
UPDATED : மே 19, 2025 12:00 AM
ADDED : மே 19, 2025 12:29 PM

மும்பை:
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதை அடுத்து, துருக்கி பல்கலைகளுடனான ஒப்பந்தங்களை, ஐ.ஐ.டி., மும்பை நிறுத்தி வைத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7ல், ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில், பாகிஸ்தானை நம் ராணுவத்தினர் கதிகலங்க வைத்தனர். தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., நம் படையினர் மீது தாக்குதல் நடத்தியது.
இதை நம் ராணுவத்தினர் முறியடித்தனர். பாக்., கெஞ்சியதை அடுத்து, போர் நிறுத்தம் அமலானது. நம் நாட்டின் மீது பாக்., ஏவிய ட்ரோன்கள், மேற்காசிய நாடான துருக்கிக்கு சொந்தமானவை என்பது தெரிய வந்தது.
விசாரணையில், 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மட்டுமின்றி, அதை இயக்க ஆப்பரேட்டர்களையும் பாகிஸ்தானுக்கு துருக்கி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா - துருக்கி இடையேயான உறவில் கசப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான இந்தியர்களும், துருக்கிக்கு சுற்றுலா செல்வதை புறக்கணித்து வருகின்றனர். உத்தரகண்டில் உள்ள ஐ.ஐ.டி., ரூர்க்கி நிர்வாகம், துருக்கியின் இனோனு பல்கலை உடனான ஒப்பந்தத்தை சமீபத்தில் ரத்து செய்தது.
இதன் தொடர்ச்சியாக, ஐ.ஐ.டி., மும்பை நிர்வாகமும், துருக்கி பல்கலைகளுடனான ஒப்பந்தங்களை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக நேற்று அறிவித்துள்ளது.