சுகாதார ஆராய்ச்சியில் கை கோர்த்த சென்னை ஐஐடி - எல்எஸ்யூ ஹெல்த்
சுகாதார ஆராய்ச்சியில் கை கோர்த்த சென்னை ஐஐடி - எல்எஸ்யூ ஹெல்த்
UPDATED : ஆக 28, 2025 12:00 AM
ADDED : ஆக 28, 2025 04:18 PM

சென்னை:
உலகளாவிய சுகாதார கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தும் நோக்கில், சென்னை ஐஐடி மற்றும் அமெரிக்காவின் எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்ஸ் இணைந்து செயல்பட உள்ளன.
சென்னையில் அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சியில் சிறப்புத் திறன்களை கொண்ட எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்சின் அனுபவத்தையும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ள சென்னை ஐஐடியின் திறன்களையும் ஒருங்கிணைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் மரபணு, செயற்கை நுண்ணறிவு, மலிவு விலை நோயறிதல், ஸ்மார்ட் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுகுறித்து எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்ஸ் வேந்தர் டாக்டர் ஸ்டீவ் நெல்சன், “சென்னை ஐஐடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் எங்கள் 7 சிறப்பு ஆராய்ச்சி மையங்களும் இணைந்து, உலகளாவிய சுகாதாரத் தீர்வுகளை உருவாக்கும்” என்றார்.
சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறுகையில், “இந்த ஒத்துழைப்பால் எங்கள் தொழில்நுட்ப மேம்பாடுகள் உலகளாவிய சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், சர்வதேச அளவில் எங்கள் பங்கு அதிகரிக்கும்” என்றார்.
2030-க்குள் எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்ஸை அமெரிக்காவின் முன்னணி 50 கல்வி சுகாதார மையங்களில் ஒன்றாக மாற்றவும், ஐஐடி சென்னை தனது உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி ஈடுபாட்டை மேம்படுத்தவும் இந்த கூட்டாண்மை இலக்கிடப்பட்டுள்ளது.

