சென்னை ஐ.ஐ.டி., 'பள்ளி இணைப்பு' திட்டத்திற்கு விண்ணப்பப் பதிவு துவக்கம்
சென்னை ஐ.ஐ.டி., 'பள்ளி இணைப்பு' திட்டத்திற்கு விண்ணப்பப் பதிவு துவக்கம்
UPDATED : நவ 20, 2026 08:53 PM
ADDED : நவ 20, 2026 09:00 PM

சென்னை:
பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையிலும், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலும், சென்னை ஐ.ஐ.டி., 'பள்ளி இணைப்பு' என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், வரும் ஜனவரி 2027ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்க்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
இது, சென்னை ஐ.ஐ.டி.,யின் மக்கள் தொடர்பகம் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் சார்பில், 8 வார கால ஆன்லைன் சான்றிதழ் படிப்பாக நடத்தப்படுகிறது. 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.
வழக்கமான பள்ளிப் பாடத்திட்டத்தைத் தாண்டி, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், விண்வெளிப் பொறியியல், இணையப் பாதுகாப்பு, மின்னணு அமைப்புகள், கட்டிடக்கலை, தடயவியல், விளையாட்டுத் தொழில்நுட்பம், டிஜிட்டல் மனிதவியல், சூழலியல், கணிதம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாடங்கள் இதில் கற்றுத்தரப்படுகின்றன. இந்தப் பாடங்களை ஐ.ஐ.டி., மெட்ராஸ் மற்றும் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களின் பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்கள் மாணவர்களுக்கு நேரடியாகக் கற்பிக்கின்றனர்.
இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான ஆண்ட்ரூ தங்கராஜ் கூறுகையில், 'நாடு முழுவதும் உள்ள 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் இதில் இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இத்திட்டத்தில் இணைய பள்ளிகளுக்கு எவ்வித பதிவுக் கட்டணமும் கிடையாது. ஆர்வமுள்ள பள்ளிகள், தகவல் தொடர்புக்காக ஒரேயொரு ஆசிரியரை மட்டும் நியமித்து ஆன்லைன் வாயிலாகத் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்தால் போதும்' எனத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இது வரை 6,500க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 2.25 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தில் இணைந்து பயனடைந்துள்ளனர். வரும் ஜனவரி 11, 2027 அன்று புதிய பேட்ச்க்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இதில் சேர விரும்பும் மாணவர்கள் பாடம் ஒன்றுக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, ஜனவரி 8, 2027ம் தேதிக்குள் https://code.iitm.ac.in/schoolconnect/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு connect@study.iitm.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
