சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்பம் உலக அரங்கில் தடம் பதிப்பு
சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்பம் உலக அரங்கில் தடம் பதிப்பு
UPDATED : ஜூன் 18, 2026 10:30 AM
ADDED : ஜூன் 18, 2026 10:32 AM
சென்னை:
'பாரத் இனோவேட்ஸ்' தொழில்நுட்ப மாநாட்டில், பல்வேறு நாட்டு நிறுவனங்களுடன், ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், சென்னை ஐ.ஐ.டி., கையெழுத்திட்டு, உலக அரங்கில் தடம் பதித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில், 'பாரத் இனோவேட்ஸ் 2026' என்ற தலைப்பில், ஆழ்நிலை தொழில்நுட்ப கண்காட்சியை, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர், நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர்.
நேற்றைய நிகழ்வில், சென்னை ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.டி.எம்., குளோபல் அமைப்புகளின் சார்பில் கண்டறியப்பட்டுள்ள, ஹைப்பர்லுாப் போக்குவரத்து, 5ஜி - 6ஜி தகவல் தொடர்பு, ஆய்வக வைரத் தொழில்நுட்பம் உள்ளிட்டவை காட்சிபடுத்தப்பட்டன.
அவற்றை பார்வையிட்ட, சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், சென்னை ஐ.ஐ.டி.,யுடன், ஏழு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இரண்டு வணிக ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளன. இவற்றின் வணிக மதிப்பு, 830 கோடி ரூபாய்.
பின்லாந்தின் 'ஐ.சி., இ.ஒய்.இ.,' மற்றும் டிடெக்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம்; பிரான்சின் சப்ரான் மற்றும் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனம் ஆகியவற்றுடன், விண்வெளித்துறை தொழில்நுட்பத்துக்கான ஒப்பந்தத்தில், ஐ.ஐ.டி., ஆதரவுடன் செயல்படும், அக்னிகூல் காஸ்மாஸ் நிறுவனம் கையெழுத்திட்டது.
ஐ.ஐ.டி.,யின் டியூட்டர் ஹைப்பர்லுாப் நிறுவனம், ஜெர்மனியின் 'திஸ்சென் குரூப்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஐ.ஐ.டி.,யின், 'ஐ - எலக்ட்ரான் டெக்னாலஜிஸ்' நிறுவனம், எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் தொடர்பாக, ஐரோப்பாவின் 'ஆல்டன்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறுகையில், “சர்வதேச தொழில்நுட்ப மாநாடுகள், சென்னை ஐ.ஐ.டி.,க்கு திருப்பு முனையாக அமைகின்றன. நம் நாட்டின் கண்டுபிடிப்புகளில், உயர்கல்வி நிறுவனங்கள், தங்களின் பங்களிப்புகளை வெளிப்படுத்துவதையும், உலக அரங்கிற்கு, இந்தியா தலைமை தாங்க தயாராகிவிட்டதையும், இது போன்ற மாநாடுகள் வெளிப்படுத்துகின்றன,” என்றார்.
