UPDATED : பிப் 08, 2025 12:00 AM
ADDED : பிப் 08, 2025 06:12 PM
ஹவுஸ் காஸ்:
டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக மிரட்டி, ஐ.ஐ.டி., மாணவரிடம் 4.33 லட்ச ரூபாய் மோசடி செய்த ஒருவரை சென்னையில் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
டில்லி ஐ.ஐ.டி.,யில் நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி மொபைல் போனில் மர்ம அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், அவரது பெயரில் மும்பையில் இருந்து பெய்ஜிங்கிற்கு சந்தேகத்திற்கிடமான பார்சல் அனுப்பப்படுவதாக மிரட்டியுள்ளார்.
அதுதொடர்பாக அவரை டிஜிட்டல் கைது செய்வதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக மும்பை போலீசார் விசாரிக்க உள்ளதாக மாணவரை நம்பவைத்தார். சிறிது நேரத்தில் மும்பை போலீஸ் என்று கூறி ஒருவர் பேசி, மாணவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் தவறு செய்யவில்லை என்றால், தான் கூறும் வங்கிக்கணக்குகளுக்கு பணம் செலுத்தும்படி கூறியுள்ளார்.
அதன்படி மாணவரும், பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மூன்று நாட்களில் 4.33 லட்ச ரூபாய் பணப்பரிமாற்றம் செய்துள்ளார். சில நாட்களில் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். பணப்பரிமாற்றம் செய்த வங்கிக்கணக்குகளை போலீசார் ஆராய்ந்தனர். அத்துடன் ஹாங்காங்கில் இருந்து மாணவரை போனில் தொடர்பு கொண்டதையும் கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக சென்னையில் தலைமறைவாக இருந்த மதன் லால், 29, என்பவரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
நண்பர்களின் வங்கிக்கணக்கை மோசடியாக பயன்படுத்தி, பணத்தை மதன் லால் எடுத்ததை போலீசார் உறுதி செய்தனர். பணத்தை எடுத்து, அதை அமெரிக்க டாலர்கள் மற்றும் கிரிப்டோ கரன்சியாக மாற்றி, அவற்றை ஒரு சீன நாட்டவருக்கு அதிக விலைக்கு விற்று, தன் வங்கிக் கணக்குகளில் பணம் பெற்றதை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.