ஐஐடி மாணவர்கள் புதுமைக் கண்டுபிடிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: தர்மேந்திர பிரதான்
ஐஐடி மாணவர்கள் புதுமைக் கண்டுபிடிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: தர்மேந்திர பிரதான்
UPDATED : ஆக 18, 2025 12:00 AM
ADDED : ஆக 18, 2025 08:49 AM

புதுடில்லி:
மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் நேற்று இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), டில்லி வளாகத்துக்குச் சென்று மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் உயர்கல்வித் துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, டில்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர், இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் தொலைநோக்கு இலக்கை அடைய, தற்போதைய தருணம் தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது, என்றார்.
மாணவர்களின் கனவுகள், ஆராய்ச்சிகள், தொழில்நுட்ப சவால்கள் குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்ட அமைச்சர், திறன் மேம்பாடு மற்றும் புதுமை உணர்வை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், புதுமையான யோசனைகளை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு, ஒவ்வொரு துறையிலும் தற்சார்பு நோக்கை எட்ட மாணவர்கள் பாடுபட வேண்டும். அதிக அளவில் புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும், என்று மாணவர்களை ஊக்குவித்தார்.
இந்தியாவை உலகளாவிய தீர்வுகளின் மையமாக மாற்றவும், வருங்கால தலைமுறைக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் அரசு கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் தோளோடு தோள் நிற்கிறது, என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.