UPDATED : ஏப் 16, 2024 12:00 AM
ADDED : ஏப் 16, 2024 10:15 AM
கோத்தகிரி:
கோத்தகிரி ஈளாடா பகுதியில் இயங்கி வரும், தனியார் எஸ்டேட் குழுமம், இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஸ்போர்ட்ஸ் அகாடமி துவக்கி உள்ளது.
இதன் துவக்க விழா, எஸ்டேட் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்டேட் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சிவக்குமார் பேசியதாவது:
முதற்கட்டமாக, 30 அணிகளுக்கு வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, கிரிக்கெட் மற்றும் வாலிபால் உட்பட, ஏழு விளையாட்டுகளுக்கு, எவ்வித கட்டணமும் இல்லாமல், தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களால், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இந்த குழுவில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்கள், நான்கு கிரிக்கெட் அணிகளாக நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மேலும், மாவட்ட அளவில் பங்கேற்கும் வீரர்கள், பிற விளையாட்டுகளில் மாநில அளவில் பங்கேற்க செல்லும் போது, வீரர்களுக்கான அனைத்து செலவுகளையும், ஸ்போர்ட்ஸ் அகாடமி ஏற்றுக்கொள்ளும்.
எனவே, இந்த வாய்ப்பை மாணவர், மாணவியர் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.