UPDATED : ஜூலை 02, 2024 12:00 AM
ADDED : ஜூலை 02, 2024 10:13 AM

மும்பை:
வாராக் கடனின் அளவு, கல்வி கடன்களில் அதிமாக உள்ளதாகவும்; வீட்டுக் கடன்களில் குறைவாக உள்ளதாகவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, ஜூன் மாதத்துக்கான அதன் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தனிநபர் கடன் பிரிவில், வாராக் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் உட்பிரிவுகளைப் பொறுத்தவரை, கல்விக் கடன் பிரிவில், வாராக் கடனின் அளவு அதிகமாகவும்; வீட்டுக் கடன் பிரிவில் குறைவாகவும் உள்ளது.
எனினும், இதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும், அனைத்து வங்கிகளின் தனிநபர் கடன் பிரிவிலும், வாராக் கடன் விகிதங்கள் குறைந்துள்ளன. வங்கிகளின் சொத்து தரம், மூலதனம் மற்றும் லாபம் உள்ளிட்டவை வலுவாக உள்ளன. வங்கிகளின் பங்குச் சந்தை செயல்பாடுகளும் இதற்கு உதவியுள்ளன.
தனியார் வங்கிகள், கிட்டத்தட்ட 50 சதவீதத்துக்கும் அதிகமான கடன்களை, தனிநபர் பிரிவுக்கே வழங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக, வீட்டுக் கடன் பிரிவுக்கே அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம், 31 சதவீதமாக இருந்த கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகள், நடப்பாண்டு ஏப்ரலில் 23 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல 25.70 சதவீதமாக இருந்த சில்லரை கடன்களின் வளர்ச்சியும், 17.10 சதவீதமாக குறைந்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.