இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோள்; விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்!
இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோள்; விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்!
UPDATED : நவ 19, 2024 12:00 AM
ADDED : நவ 19, 2024 08:16 AM
வாஷிங்டன்:
இஸ்ரோ தயாரித்த 4,700 கிலோ எடை கொண்ட ஜிசாட் 20 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்காக, ஜிசாட் 20 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் எடை 4,700 கிலோ. இதனை இஸ்ரோவுக்கு சொந்தமான ராக்கெட்டுகளால் விண்ணில் செலுத்துவது கடினமானது. இதனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியை இஸ்ரோ நாடியது. அதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒத்துகொண்டது.
இந்நிலையில், இன்று (நவ.,19) அமெரிக்காவின் ப்ளோரிடாவில், கேப் கேனரவல் ஏவுதளத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட், மூலம் ஜிசாட் 20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
* இதில் உள்ள தகவல் தொடர்பு பேலோட் 14 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது.
* செயற்கைக்கோள் செயல்பாட்டிற்கு வந்ததும் தொலைதூரப் பகுதிகளுக்கான இணைய இணைப்பை வழங்கும்.
* இந்த செயற்கைக்கோளில் 32 பீம்கள் இணைக்கப்பட்டுள்ளது.
* இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.