இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் 8 ஆண்டில் ரூ.3.78 லட்சம் கோடியை எட்டும் மத்திய இணை அமைச்சர் தகவல்
இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் 8 ஆண்டில் ரூ.3.78 லட்சம் கோடியை எட்டும் மத்திய இணை அமைச்சர் தகவல்
UPDATED : ஆக 25, 2025 12:00 AM
ADDED : ஆக 25, 2025 08:42 AM

சென்னை:
''இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம், 2033ம் ஆண்டுக்குள், 3.78 லட்சம் கோடி ரூபாயை எட்டும்,'' என மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பேசினார்.
சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லுாரியின், 24வது பட்டமளிப்பு விழா, சென்னையில் அக்கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், மத்திய கல்வி துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
விழாவில், 1,567 இளநிலை மாணவர்களுக்கும், 153 முதுகலை மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன; 20 பேர் தங்கப் பதக்கம் பெற்றனர்.
விழாவில், சுகந்தா மஜும்தார் பேசியதாவது:
மின்னணு கல்வி மற்றும் தேசிய கல்வி கொள்கை போன்ற சீர்திருத்தங்களால், நாட்டில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு, 2013ல் இருந்த 33.95 சதவீதத்தில் இருந்து, 2024ம் ஆண்டு, 54.81 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த, 2024 - 25ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 8.2 சதவீதமாக இருந்ததன் வாயிலாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் வேகமாக இருந்தது. இந்தியாவை, 'செமி கண்டக்டர்' துறையில் உலகளாவிய மையமாக மாற்ற, மத்திய அரசு, 76,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
வரும், 2030ம் ஆண்டுக்குள், 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற இலக்கை அடைய, மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. 2023 - 24ம் ஆண்டில், பாதுகாப்பு உற்பத்தி துறை, மின்சார வாகனங்கள் போன்ற முக்கிய துறைகளில், 1.27 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த துறைகள் அனைத்திருக்கும் இன்ஜினியர்கள் தேவை.
செயற்கை நுண்ணறிவு திறனில் உலகளாவிய மையமாக, இந்தியாவை உயர்த்த, 10,372 கோடி ரூபாய் செலவில், 'இந்தியா ஏ.ஐ., மிஷன்' திட்டத்தை, மத்திய அரசு துவங்கி உள்ளது.
அதேநேரத்தில், 2035ம் ஆண்டுக்குள், இந்தியாவின் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு வாயிலாக, 967 'பில்லியன்' அமெரிக்க டாலர்கள், அதாவது 83 லட்சம் கோடி ரூபாயை ஈட்ட முடியும்.
இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம், 2033ம் ஆண்டுக்குள், 3.78 லட்சம் கோடி ரூபாயை எட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில், வினிதா மருத்துவமனை தலைவரும், அசோக் லேலாண்ட் முன்னாள் தலைமை செயல் அலுவலருமான வினோத் கே.தாசரி, கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.
மேலும், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கம் மேகநாதன், துணை தலைவர் அபய் மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.